Main Menu

சுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்

தமிழ்த்தாய் ஈன்ற நற்றவப் புதல்வர்களுள் யாழ்நூல் கண்ட விபுலானந்த அடிகளாரும் ஒருவராவார். பதினான்கு ஆண்டுகள் மேற்கொண்ட இயலிசை ஆய்வின் அடிப்படையிலும், சிலப்பதிகாரத்தில் யாழ் பற்றிய குறிப்புகள் அடிப்படையிலும் யாழ்நூல் என்ற தலைசிறந்த இசைத் தமிழாய்வு நூலை எழுதியுள்ளார்.

4.3.1 வாழ்வியல்

இலங்கை யாழ்ப்பாணம் மட்டக்களப்புப் பகுதியில் உள்ள காரைத் தீவில் சாமித் தம்பியார், கண்ணம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு மயில்வாகனன் என்று பெயரிட்டனர். 1898 இல் பள்ளியில் சேர்ந்தார். 1902-இல் மெதாடிஸ்ட் பள்ளியிலும் பிறகு மட்டக்களப்புக் கல்லூரியிலும் பிறகு ஆர்ச் மிக்கேல் கல்லூரியிலும் பயின்றார். தனது பதினாறாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தாரால் நடத்தப்பட்ட மேல் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றார். மட்டக்களப்பில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் ஆசிரியரானார். மூன்றாண்டுகள் பணிக்குப் பின் ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். 1916-இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வினை முடித்தார். 1920-இல் இலண்டன் பல்கலைக்கழகத்தாரால் நடத்தப் பெற்ற இளம் அறிவியல் பட்டத் தேர்விலும் வெற்றி பெற்றார். பிறகு கல்லூரித் தலைமை ஆசிரியர் ஆனார். இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து 1924-ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் பௌர்ணமியன்று சுவாமி விபுலானந்தர் ஆனார். தமிழறிஞர்கள் இவரை விபுலானந்த அடிகள் என்று அழைத்தனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி பின்பு அப்பணியில் தொடராமல் தமிழிசை ஆய்வில் தோய்ந்து உழைத்து யாழ் நூல் என்ற அரிய இசைத் தமிழ் நூலை 1947-இல் எழுதி வெளியிட்டார்.

4.3.2 யாழ் நூலமைப்பு

யாழை மீட்டுருவாக்கம் செய்யும் நிலையில் அடிகளார் யாழ்நூல் ஆய்வில் ஈடுபட்டார். சிலப்பதிகார அரங்கேற்று காதையில் யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகள் இயைந்த விரிவுரையாக இவ்யாழ்நூல் அமைந்துள்ளது என்று கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சர் நீ. கந்தசாமி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்நூல் பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரியியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற ஏழு இயல்களைக் கொண்டு அமைந்துள்ளது.

பாயிரவியல்
பாயிரவியல் இறை வணக்கம், இசை நரம்புகளின் பெயரும் முறையும், இசை நரம்புகளின் ஓசைகளும் அவைகளுக்குப் பிற்காலத்தார் வழங்கிய பெயர்களும், இயற்கையின் இயன்ற இசையும், மெய்ப்பாடுகளும் இணை, கிளை, பகை, நட்பு என்னும் பொருந்திசை நிலைகள். ஆரோசை, அமரோசை, மூவகைத் தானம், தேவபாணி, பரிபாடல், மிடற்றுப் பாடல், கருவிப் பாடல், பாணர் வரன்முறை, திணைக் கருப்பொருளாகிய யாழின் பகுதி, யாழ்க் கருவியின் தெய்வ நலம், இக்கருவி தமிழ்நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் பரவிய வரன்முறை போன்றன கூறப்பட்டுள்ளன.

யாழ் உறுப்பியல்
யாழ் உறுப்பியல் என்ற பகுதியில் வில் யாழ், பேரியாழ், மகரயாழ், சீறியாழ், செங்கோட்டி யாழ்,சகோட யாழ் ஆகியவற்றின் உறுப்புகளின் அமைதி பற்றிக் கூறப்பட்டுள்ளது.

வில் வடிவில் அமைந்த யாழ் வில் யாழாகும். யாழ் வகைகளில் முதன்மை பெறும் யாழ்கள் நான்காகும்.பேரியாழ், மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்பனவாகும். இந்நான்கு வகை தவிர நாரத யாழ், கீசக யாழ், தும்புரு யாழ், மருத்துவ யாழ் போன்றனவும் உள. கடைச் சங்கக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் சகோட யாழ், சீறியாழ், வில்யாழ் கூறப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, சீவக சிந்தாமணியில் சகோட யாழ், மகர யாழ்,செங்கோட்டி யாழ் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.

பேரியாழ் 21 நரம்புகளையும், மகர யாழ் 19 நரம்புகளையும், சகோட யாழ் 14 நரம்புகளையும், செங்கோட்டி யாழ் 7 நரம்புகளையும் கொண்டு விளங்குகின்றன.

யாழின் உறுப்புகள் பற்றி, பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை நூல்கள் வாயிலாக அறியலாம்.

ஏனைய இயல்கள்
யாழ் நூலில் இசை நரம்பியல், பாலைத் திரியியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற பகுதிகளில் இசை இலக்கணங்கள் பற்றிய செய்திகள் உள்ளன; அந்நூல் இசை இலக்கிய ஆய்வாகவும் அமைந்துள்ளது.

பண்ணியலில் பாலை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்ற நாற்பெரும் பண்களும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் நால்வகை வேறுபாடுகளினால் ஒவ்வொன்றும் நான்காகி 16 பண்கள் ஆகும் நிலை கூறப்பட்டுள்ளது.

தேவார இயலில் 103 பண்களில் தேவாரப் பாடலில் காணப்படும் பண்கள், கட்டளை விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

பழந்தமிழிசை மரபிற்கும் வடநாட்டிசை மரபிற்கும் அமைந்த தொடர்பு நிலையையும் விளக்கியுள்ளார்.

4.3.3 நூல் அரங்கேற்றம்

யாழ் நூல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திருக்கொள்ளம் புதூர் திருக்கோயிலில் ஜு ன் 5.6.1947இல் அரங்கேற்றம் செய்யப்பட்டது. முதல் நாள் விழாவில் திருக்கோயில் வரிசையுடன் இயற்றமிழ்ப் புலவர்கள் இசை அறிஞர்கள், இசை ஆய்வாளர்கள் சூழ்ந்து வர அடிகளாரின் கணக்குப்படி தயாரிக்கப்பட்ட முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டிப் பிரகாசிகை போன்றவற்றைத் தாங்கி வந்தனர். கோனூர் சமீன்தார் பெ.ராம.சிதம்பரம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இசைப் பேரறிஞர் க.பொ.சிவானந்தம், அடிகளார் கண்டு உணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிந்தார்.

இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், குமரன் ஆசிரியர் சொ.முருகப்பா, தமிழ்ப் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சென்னைப் பல்லைக் கழக இசைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.

யாழ் நூல் அரங்கேற்றம் பெற்ற அடுத்த திங்கள் 19.7.1947 அன்று அடிகளார் இம்மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்.