Main Menu

சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பம் – வரையரைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டிற்குப் பெருமளவு வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது.

இதுகுறித்த தெளிவுபடுத்தல்கள் அடங்கிய அறிக்கையொன்றையும் சுற்றுலாத்துறை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து உரிய முற்பாதுகாப்பு நடைமுறைகளுடன் நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை வரவேற்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை தயாராக இருக்கிறது. இதன்போது அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்பதுடன் அவர்கள் குழுக்களாகவோ, குடும்பமாகவோ அல்லது தனியாகவோ வருகைதர முடியும்.

சுற்றுலாப்பயணிகளின் வருகைக்காக ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம், கொழும்பு இரத்மலானை விமானநிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ விமானநிலையம் என்பவை தொழிற்படும்.

சுற்றுலாப்பயணிகள் அனைவரிடத்திலும் செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இருப்பது கட்டாயமாகும். பயணிகளுக்கான விசா 30 நாட்கள் செல்லுபடிக் காலத்திற்கு விநியோகிக்கப்படும் என்பதுடன், அவர்களது வருகையின் பின்னர் 6 மாதகாலத்திற்கு அதனை நீடித்துக்கொள்ளவும் முடியும். நீண்டகாலம் இலங்கையில் தங்கியிருக்க விரும்பும் பயணிகளுக்கான விசா அனுமதி தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகிறது. விசாவைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் 100 அமெரிக்க டொலர்களாகும்.

விசாவைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பத்திரத்துடன் இலங்கையில் தங்கியிருப்பதற்கு முன்பதிவு செய்யப்பட்டமைக்கான விபரங்கள் (சுற்றுலாவிடுதி,சிறிய ஹோட்டல்கள் போன்றவை) இலங்கையில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் இடங்களின் விபரங்கள், மீண்டும் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கான பற்றுச்சீட்டு மருத்துவக் காப்புறுதி அத்தாட்சி ஆகியவையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இலங்கைவரும் சுற்றுலாப்பயணிகள் குறைந்தபட்சம் 5 இரவுகளேனும் நாட்டில் தங்கியிருப்பது அவசியமாகும்.

பயணிகள் தமது சொந்த நாட்டிலிருந்து வருவதற்கு  முன்னதாக கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருத்தல் அவசியமாகும். விமானநிலையத்தின் புறப்படுகை நேரத்திற்கு 72 மணித்தியாலங்களை விடவும் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கையாக அது இருக்கக்கூடாது.

இலங்கையில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்படாதவிடத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.

நாட்டிற்குவரும் சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் விமானநிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதுடன், அதற்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது.

தற்போது பரிசோதனை முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு 24 மணிநேரங்கள் எடுக்கும். எனினும் ஓகஸ்ட் மாதமளவில் 4 – 6 மணித்தியாலங்களுக்குள் பரிசோதனை முடிவுகளைப் பெறத்தக்க வகையில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளோம்.

எனினும் முடிவுகளைப் பெறுவதற்குப் பயணிகள் 24 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியேற்படின், ஓர் இரவு தங்குவதற்காக கொழும்பு அல்லது நீர்கொழும்பில் அங்கீகரிக்கப்பட்ட 4 அல்லது 5 நட்சத்திர விடுதியொன்றை சுற்றுலாப்பயணிகள் தெரிவுசெய்ய முடியும்.

அவர்கள் நாட்டிற்கு வந்து 4 – 5 நாட்களின் பின்னர் மீண்டும் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். 10 நாட்களுக்கும் மேலாக இங்கு தங்கியிருக்கவுள்ள பயணிகள் 3 ஆவது தடவையாகவும் பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாகும்.

பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்படின் நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து தெரிவுசெய்யப்பட்ட ஹோட்டலில் தனிமைப்படுத்தல் அல்லது வைத்தியாசாலையில் சிகிச்சை என்பன வழங்கப்படும்.

சுற்றுலாப்பயணிகள் தத்தமது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு நாட்டிற்குள் வருவதற்கு முன்னதாகவே தமது பயணமுகவர்கள் ஊடாக நாட்டிற்குள் பயணிப்பதற்கான போக்குவரத்து மார்க்கத்தைத் தயார்செய்துகொள்ள வேண்டும். பொதுப்போக்குவரத்து சேவையை சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்த முடியாது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து சுற்றுலாத்தளங்களும் உரிய சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றித் திறக்கப்படும். சுற்றுலாப்பயணிகளுக்கு மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான தடைகள் எவையும் விதிக்கப்படமாட்டாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares