சுப்பர் கிளாசிக் கால்பந்து போட்டியை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியீடு

இரசிகர்களின் மோதலால் ஒத்திவைக்கப்பட்ட பிரபலமான கோபா லிபர்டடோர்ஸ், கால்பந்து தொடரின், சுப்பர் கிளாசிக் என அழைக்கப்படும் போட்டி, டிசம்பர் மாதம் 9ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இறுதிப் போட்டி, மெட்ரிட்டில் உள்ள ரியல் மெட்ரிட் விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்ஜென்டினாவில் 58 ஆண்டுகால வரலாற்றில் மிகப் பெரிய போட்டியாக கருதப்படும், போகா ஜூனியர்ஸ் மற்றும் ரிவர் பிளேட் அணிகளுக்கிடையிலான இப்போட்டியை, கடந்த சனிக்கிழமை மோனூமண்டல் விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

பல இலட்ச ஆர்ஜென்டினா கால்பந்து இரசிகர்கள், எதிர்பார்த்து காத்திருந்த இப்போட்டி நடைபெறுவதற்கு முன்னர், போகா ஜூனியர்ஸ் அணியின் வீரர்கள், பேரூந்தில் மைதானத்திற்கு வரும் போது, வீதியில் ஒன்று திரண்டிருந்த எதிரணி இரசிகர்கள், பேரூந்தின் மீது கற்கள், போத்தல்கள் போன்ற பொருட்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால், பேரூந்தில் சென்ற போகா ஜூனியர்ஸ் அணியின் வீரர்கள் காயத்துக்குள்ளாகினர். இதன் பிறகு பேரூந்தில் இருந்து அவர்களை பத்திரமாக மீட்ட பொலிஸார், வீரர்களை அவர்களது சொந்த மைதானத்திற்கு பல பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவத்தையடுத்து, போகா ஜூனியர்ஸ் மற்றும் ரிவர் பிளேட் அணி இரசிகர்களுக்கிடையில் மோதல் வெடித்தது.

இதனை கட்டுப்படுத்த, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கண்ணீர் புகைகளை வீசி, இரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர் இதனையடுத்து பொலிஸாருக்கும் இரசிகர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது. இதனால் பொலிஸார் தடியடி நடத்தி, கலவரததை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதன்போது கலவரத்தில் ஈடுபட்ட சிலரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இவ்வாறான பதற்றமான நிலையில் போட்டி நடத்துவது உகந்தது அல்ல எனக் கூறி போட்டி அமைப்பாளர்கள், போட்டியை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர், எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி பியூனோஸ் ஏயார்ஸ் உள்ள போகாவின் புனிதமான பாம்பனோரா மைதானத்தில் நடைபெற்ற, முதலாவது லெக் போட்டியில், போகா ஜூனியர்ஸ் மற்றும் ரிவர் பிளேட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அப்போது இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை கொடுத்த அப்போட்டி, 1-1 என்ற கோல், கணக்கில் சமநிலையில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !