சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்பினர் கைது: உருட்டு கட்டைகளுடன் குவிந்த நா.த.க

சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியார் அமைப்புகளைச் சேர்ந்த 1,150 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையொட்டி உருட்டு கட்டைகளுடன் சீமான் வீட்டில் குவிந்த நாதகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமான் 2026-ல் திராவிடத்தை துடைத்து தூர வீசுவேன் என தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து விமர்சித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை பெரியார் கொள்கை சார்ந்த பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் 300-க்கும் மேற்பட்ட நாதகவினர் உருட்டு கட்டைகளுடன் நின்றனர். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலை கழகம் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட 1,150-க்கும் மேற்பட்டோர் சீமான் வீட்டை நேற்று முற்றுகையிட, கிழக்கு கடற்கரை சாலையில் பேரணியாக வந்தனர். சீமான் வீட்டுக்கு அருகே போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதற்கிடையே அங்கிருந்த சீமானின் பேனரை கிழித்து அவரது படத்தை செருப்பால் அடித்து எரித்தனர். இதற்கிடையே பாதுகாப்புக்காக குவிந்திருந்த நாதகவினருக்கு பிரியாணி சமைத்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்காக இசைக் கச்சேரியும் நடத்தப்பட்டது.
வீடு முற்றுகை குறித்து செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: அடிப்படையிலே பெரியார் பிழையானவர். எங்களுக்கு தேவையில்லை. “தமிழ், தமிழர், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம். இது ஆரியர்களுக்கு செய்யக்கூடிய கைக்கூலித்தனம். தமிழ் முட்டாள்களின் பாஷை. தமிழ் காட்டுமிராண்டி மொழி. தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள்” என பெரியார் பேசியிருக்கிறார்.
கர்நாடகவில் பிறந்த அவர் என் மொழியை தாழ்த்தி பேசியிருக்கிறார். அவருக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது, இதுதொடர்பான விவாதிக்க திக தலைவர் வீரமணியை பேச சொல்லுங்கள், அதற்கு நான் பதில் அளிக்கிறேன். வள்ளலார், வள்ளுவரை திராவிட கூட்டம் அழிக்க நினைக்கிறது. பிரபாகரனுடனான புகைப்படம் பொய் என கூறியுள்ள சினிமா இயக்குநர் 15 ஆண்டுகளாக எங்கே இருந்தார்?
பெரியார் என்ற பிம்பத்தின் மேல் அடி விழுந்தவுடன் பிரபாகரன் படத்தை தூக்கிக்கொண்டு வருகின்றனர். எனில் பெரியாரா, பிரபாகரானா என மோதி பார்க்கலாம். தடியை ஊன்றி தள்ளாடி வரும் கூட்டத்தை ராணுவ அணிவகுப்புடன் நிற்கும் கூட்டம் எதிர்த்து நிற்கும். 2026 தேர்தலுக்கு பின் திராவிடத்தை துடைத்து தூர வீசுவேன். எனவே தவெக தலைவர் விஜய்யும் எந்த கொள்கையை ஏற்கிறார் என்பதை விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.
இந்நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் வீட்டை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.