சீன பேட்மிண்டன் ஜாம்பவான் லின் டேன் ஓய்வு!
இரண்டு முறை ஒலிம்பிக் சம்பியனும் சீன பேட்மிண்டன் ஜாம்பவானுமாகிய லின் டேன், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
37 வயதான சீனாவைச் சேர்ந்த லின் டேன், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். அவர் ஐந்து முறை உலக பேட்மிண்டன் சம்பியனும் ஆவார்.
தனது ஓய்வு குறித்து லின் டேன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் விரும்பும் விளையாட்டுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணித்துள்ளேன். எனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் இரசிகர்கள் என்னுடன் பல மகிழ்ச்சியான நேரங்கள் மற்றும் கடினமான தருணங்களில் வந்துள்ளனர்.
இப்போது எனக்கு 37 வயதாகிறது. எனது உடல் தகுதி மற்றும் வலி இனி எனது அணி வீரர்களுடன் பக்கபலமாக சண்டையிட அனுமதிக்காது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லின் தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் ‘சுப்பர் டேன்’ என்ற புனைப்பெயரைப் பெற்றார்.
ஒலிம்பிக்ஸ், உலக சம்பியன்ஷிப், உலகக் கிண்ணம், தோமஸ் கிண்ணம், சுதிர்மன் கிண்ணம், சுப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் ஃபைனல்ஸ், ஆல் இங்கிலாந்து ஓபன், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசியன் சம்பியன்ஷிப் என சுப்பர் கிராண்ட்ஸ்லாம் என்று அழைக்கப்படும் 9 பெரிய தொடர் சம்பியன் பட்டங்களையும், 28 வயதுக்குள் வென்றதன் மூலம் மகத்தான வீரராக மதிப்பிடப்பட்டார். இதுவரை வேறு எந்த வீரரும் இந்தச் சாதனையை நிகழ்த்தவில்லை.
அத்துடன், உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தையும் அலங்கரித்துள்ளார். தற்போது ஓய்வுப்பெற்றுள்ள அவருக்கு பலரும் சமூகவலைதளத்தின் ஊடாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பகிரவும்...