சீனாவில் 23 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் உயிரிழப்பு!

சீனாவில் பனி படர்ந்த நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் சில ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவங்களில் 13 ​பேர் உயிரிழந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சந்திர புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற லட்சக்கணக்கான மக்கள் தங்களது தொழில் இருப்பிடங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில், சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதேபோன்று, குயிஸோவ் மாகாணத்தின் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு சிறிய ரக பேருந்து, கார் ஒன்றுடன் மோதிய விபத்தில் 8 பேர் பலியாகினர்.

அவசரமாக தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பி செல்லும் நோக்கத்தில் பனி உறைந்திருக்கும் வீதிகளில் வாகன சாரதிகள் மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதால் இந்த விபத்துகள் நேர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !