சீனாவில் ரசாயன ஆலையில் விபத்து- 3 தொழிலாளர்கள் பலி
சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர்.
சீனாவின் இன்னர் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள டோங்சிங் கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சீனாவில் சமீப காலமாக ரசாயன ஆலைகளில் விபத்து அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த இரண்டு விபத்துகளில் 85 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ரசாயன ஆலைகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.