சீனாவில் தற்காப்பு கலைகள் கற்று தரும் பள்ளியில் தீவிபத்து- 18 சிறுவர்கள் உடல் கருகி பலி
சீனாவில் 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 34 பேர் பள்ளிக்கூட வளாகத்திலேயே தங்கியிருந்து தற்காப்பு கலைகளை கற்று வந்தனர்.
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தின் ஷுவாங்கியு நகரில் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ எனப்படும் தற்காப்பு கலைகளை கற்று தரும் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 34 பேர் பள்ளிக்கூட வளாகத்திலேயே தங்கியிருந்து தற்காப்பு கலைகளை கற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த பள்ளிக்கூடத்தில் திடீரென தீப்பிடித்தது. அப்போது மாணவர்கள் அனைவரும் பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். மளமளவென கொளுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளிக்கூடம் முழுவதிலும் பரவி பற்றி எரிந்தது. தீ பரவுவதை அறிந்து திடுக்கிட்டு எழுந்த மாணவர்கள் பயத்தில் அலறி துடித்தனர். தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதால் அவர்களால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற முடியாமல் போனது. இதனிடையே அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 18 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 16 மாணவர்களுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.