சீனாவிற்கு பாரிய நிலச்சரிவு எச்சரிக்கை!- 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பாரிய நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாங்சி ஆற்றுப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட பாரிய மண்சரிவினை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாங்சி ஆற்றங்கரையை அண்மித்த பகுதிகளிலுள்ள கிராமங்களில் வாழும் சுமார் 20 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும், இதனால் எவ்வித உயிரிழப்புகளும் சம்பவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தங்கள் சொந்த இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட மக்கள், தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மண்சரிவு அபாயங்களை தடுக்கும் வகையில் 11 மீட்பு வாகனங்கள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்கள் கொண்ட மீட்புக்குழு குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், வெளியேற்றப்பட்ட மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்காகவும் மேலதிகமாக படையினரையும் குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !