சீனாவின் சந்தைகளை மூடுங்கள்!- ஐ.நா., உலக சுகாதார நிறுவனத்திடம் அவுஸ்ரேலிய பிரதமர் கோரிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்த சீனாவின் சில உணவுச் சந்தைகளை மூடுவதற்கு ஐ.நா.வும், உலக சுகாதார நிறுவனமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொற் மொரிசன் வலியுறுத்தியுள்ளார்.
அந்தவகையில், சீனாவின், எப்போதும் ஈரமாக இருக்கும் கால்நடை, கடலுணவுச் சந்தைகளை உடனடியாக மூடுவதற்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்நாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உலகில் இது போன்ற சந்தைகள் எங்கு இருந்தாலும் அவை ஆபத்தானவை எனத் தெரிவித்தார்.
வுஹான் கால்நடை மற்றும் கடலுணவுச் சந்தையில் இருந்து உருவான கொரோனா வைரஸால் இன்று உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்தைகளில் என்ன நடக்கிறது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும் என்ற அவர், உலக மக்களின் உயிரைக் காக்க, உலக சுகாதார நிறுவனம் தன்னிடம் இருக்கும் அனைத்து நிதியையும் பயன்படுத்தி அவற்றை மூட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.