Main Menu

சிறுபான்மையினரின் ஆதரவின்றி பேரின வாதிகளால் ஆட்சியமைக்க முடியாது – ரிஷாட் பதியுதீன்

பேரினவாத சிந்தனை கொண்டவர்கள் என்னதான் செய்தாலும் சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார், முசலி, புதுவெளியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “சிறுபான்மைக் கட்சிகளின் துணையின்றி நாம் ஆட்சியமைப்போம் என வீராப்புப் பேசிக்கொண்டிருக்கும் சில அரசியல்வாதிகள், பொதுத்தேர்தலின் பின்னர் தமது அறியாமையை அறிந்துகொள்வர்.

அவர்களின் உள்ளத்தில் நிறைந்துகிடக்கும் இனவாத மற்றும் மதவாத சிந்தனைகளின் வெளிப்பாடாகவே இந்த ஆசையை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், ஒருபோதும் இது நிறைவேறாது.

ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களை உசுப்பேற்றி வாக்குகளைப் பெற்றதைப் போன்று, இந்தத் தேர்தலில் அவர்கள் நினைத்தமாத்திரம் வாக்குகளைப் பெறமுடியாது.

இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், தமது இருப்புக்காக நடத்தும் போராட்டங்களை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். ஆண்டாண்டு காலமாக அங்கு வாழ்ந்துவரும் முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியில் பலமிழந்ததனாலேயே இன்று நசுக்கப்படுகின்றனர்.

அதேபோன்ற பாணியிலேயே தற்போது இங்கும் சதிகள் அரங்கேறி வருகின்றன. நமது சமூகம் அனுபவிக்கும் விஷேட உரிமைகள் மற்றும் சலுகைகளை, புதிய சட்டங்களைக் கொண்டுவந்து நசுக்குவதற்கான பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இரண்டு மாத காலத்தில் இந்த இடைக்கால – சிறுபான்மை அரசாங்கத்தில், சிறுபான்மை சமூகத்துக்கு நடந்தேறிவரும் சம்பவங்கள் நமக்கு எதிர்காலத்தை வெளிச்சம் போட்டுக்காட்டத் தொடங்கியுள்ளது. பொதுத்தேர்தலின் பின்னர், இவர்கள் தனியே நின்று ஆட்சியமைத்துக் கொண்டால் நிலைமை என்னவாகும்?” என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.