சிறிலங்கா அரசுக்கு கடுப்பை ஏற்படுத்திய ஐ.நா சிறப்பு நிபுணரின் பூர்வாங்க அறிக்கை
மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும் தீவிரவாத எதிர்ப்புத் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் ஜூலை 10 தொடக்கம் 14 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
சிறிலங்காவானது தீவிரவாதத்தை நாட்டிலிருந்து விரட்டியடிப்பதுடன் தொடர்புபட்ட சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் போன்றவற்றை வெற்றிகரமாக அமுல்படுத்தியுள்ளதா என்பதை மதிப்பீடு செய்வதற்காகவும் குறிப்பாக இவ்வாறான வெற்றிகரமான செயற்பாடுகளின் மூலம் நாட்டில் நிலையான அமைதி, பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துள்ளதா என்பதை மதிப்பீடு செய்வதற்காகவும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார்.
சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு ஐந்து நாட்கள் வரை தங்கியிருந்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமேர்சன் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக நாட்டின் பிரதமர், அதிபரின் செயலர், பாதுகாப்பு அமைச்சின் செயலர், வெளிவிவகார அமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்குகள் மற்றும் தெற்கின் அபிவிருத்தி அமைச்சர், நிதி அமைச்சர், சிறைச்சாலை சீர்திருத்தங்கள், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் மற்றும் அரச திணைக்களத் தலைவர்கள் போன்றவர்களுடனும் முப்படைகளின் இராணுவப் பொறுப்பதிகாரி, கடற்படைத் தளபதி, இராணுவ மற்றும் விமானப் படைத் தளபதிகள் போன்றோருடனும் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் தலைவர், காவற்துறை மா அதிபர், சிறப்பு அதிரடிப் படைகளின் பொறுப்பதிகாரி, குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, பயங்கரவாத விசாராணைத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, புனர்வாழ்விற்கான பொது ஆணையாளர் போன்றோரையும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமேர்சன் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஐ.நா சிறப்பு அறிக்கையாளரும் அவரது குழுவினரும் பிரதம வழக்கறிஞர், பிரதம நீதியரசர் மற்றும் கொழும்பு, அனுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரையும் சந்தித்தனர். கொழும்பிலுள்ள புதிய மகசின் சிறைச்சாலை மற்றும் அனுராதபுர சிறைச்சாலை போன்றவற்றையும் பார்வையிட்டதுடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.
இதுமட்டுமல்லாது இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சட்டவாளர்கள், குடும்பத்தினரையும் சிறிலங்காவில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலமும் அது தொடர்பான கோட்பாடுகள் மூலமும் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நேரடியாகச் சந்தித்தார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவருடனும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
சிறிலங்காவில் நீண்டகாலம் நிலவி வரும் இனப் பிரச்சினை தொடர்பான வரலாற்றையும் இதனால் உருவாக்கப்பட்டுள்ள பாரிய பாதுகாப்பு நடைமுறைகளையும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நன்கறிந்துள்ளார். 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் நாட்டில் தொடர்ந்தும் இன முரண்பாடுகள் நிலவியது.
2015ல் சிறிலங்காவின் ஆட்சியானது தேசிய அரசாங்கத்தின் கைகளுக்குச் சென்ற போது நாட்டில் மறுமலர்ச்சி, நீதி, நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களும் மனித உரிமைகளை மதித்தல் போன்றவற்றை நிலைநாட்டுவதாக உறுதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய 30/1 தீர்மானமானது சிறிலங்கா தொடர்பாக எட்டப்பட்டது.
சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் இத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு இரண்டு ஆண்டுகளும் நான்கு மாதங்களும் கடந்த நிலையிலும் கூட இத்தீர்மானத்தில் கூறப்பட்ட பல்வேறு விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக சிறிலங்காவில் கலப்பு நீதிப்பொறிமுறை ஒன்றை உருவாக்கி இதன் மூலம் உள்நாட்டு யுத்தத்தின் போது தவறிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கின்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரையை சிறிலங்கா ஏற்றுக்கொண்டு செயற்படத் தவறியுள்ளது. சிறிலங்கா தனது நாட்டின் இராணுவ வீரர்களால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு எதிராக ஒருபோதும் சட்ட நடவடிக்கையை எடுக்காது என்பதைப் பல்வேறு அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் சிறிலங்காவில் கலப்பு நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதில் சிறிலங்கா எப்போதும் பின்னிற்கிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டச் சீர்திருத்தமானது முழுமையாக மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதற்கு வழிவகுக்கப்படும் எனவும் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் இழைக்கப்பட்ட மிக மோசமான குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சிறப்பு வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றும் நிறுவப்படும் எனவும் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனிடம் தனிப்பட்ட ரீதியாக உறுதிப்பாட்டை வழங்கியுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவ வீரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஐ.நா சிறப்ப அறிக்கையாளர் அண்மையில் சிறிலங்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில், சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க வெளிப்படையாக அறிவித்திருந்தார். அத்துடன் போரின் இறுதிக்கட்டத்தில் 11 பொதுமக்கள் காணாமற் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட மூத்த கடற்படைத் தளபதி ஒருவரும் பென் எமர்சன் சிறிலங்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றமிழைக்கப்பட்ட இராணுவ வீரர்கள் நீதிச் செயற்பாட்டின் முன் நிறுத்தப்படும் போது அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக முழு நடவடிக்கையும் எடுப்பேன் என சிறிலங்காவின் பிரதம வழக்கறிஞர், ஐ.நா சிறப்பு அறிக்கையாளரிடம் உறுதிவழங்கியிருந்தார். நாட்டில் நிலையான அமைதி எட்டப்பட வேண்டுமாயின் சிறிலங்காவில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை மக்கள் உள்ளடங்கிய அனைத்து இனத்தவர்களும் சட்ட அமுலாக்கல் நிறுவகங்கள் மீது நம்பிக்கை கொள்ளும் நிலை ஏற்பட வேண்டும் எனவும் சட்டமாஅதிபர் தெரிவித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்கின்ற சந்தேகத்தின் பேரில் பலர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 1979ல் அவசரகால நிலைமைக்காக உருவாக்கப்பட்ட இந்தச் சட்டமானது பின்னர் 1982ல் நிலையான சட்டமாக வரையறுக்கப்பட்டு இன்று வரை நடைமுறையிலுள்ளது.
இந்தச் சட்டமானது சந்தேகப்படும் எவரையும் கைதுசெய்வதற்கான சட்ட உரிமையை காவற்துறை அதிகாரிகளுக்கு வழங்குகிறது. இந்தச் சட்டத்தால் சிறிலங்காவில் வாழும் முழு சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்பட்டு எவ்வித குற்றங்களும் நிரூபிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
தடுத்து வைக்கப்படுபவர்களுக்கு எதிராக காவற்துறையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதைத் தடுப்பதற்காக ஜூலை 2016ல் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டதுடன், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தால் அண்மையில் ‘பூச்சிய சகிப்புத்தன்மைக் கோட்பாடு’ உருவாக்கப்பட்டதை ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் வரவேற்றுள்ளார். இவ்வாறான கோட்பாடு வரையறுக்கப்பட்ட போதிலும் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாகும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக அதிகாரிகள் இவ்வாறான சித்திரவதைகளை மேற்கொள்கின்றனர்.
2016ன் பின்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 80 சதவீதமானவர்கள் தடுத்து வைக்கப்படும் போது பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகியமை தொடர்பாக ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் அதிருப்தி அடைந்துள்ளார். தடுத்து வைக்கப்படும் போது சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பாக 2017ல் இதுவரை விசாரணை செய்யப்பட்ட வழக்குகளில் 90 சதவீதமான வழக்குகளில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் தடுத்து வைக்கப்பட்டவர்களால் தன்னிச்சையாக வழங்கப்படவில்லை எனவும் சித்திரவதைகள் மற்றும் அச்சுறுத்தல் மூலம் அதிகாரிகளால் பலவந்தமாகப் பெறப்பட்ட வாக்குமூலங்கள் என அடையாளம் காணப்பட்டதாகவும் கொழும்பில் பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்குகளுக்குப் பொறுப்பாகவுள்ள மூத்த நீதிபதி, ஐ.நா அறிக்கையாளர் பென் எமர்சனிடம் தெரிவித்திருந்தார்.
தற்போதும் முன்னரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுடன் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் நேர்காணலை மேற்கொண்ட போது, மிக மோசமான சித்திரவதைகள் அதாவது தடிகளால் அடித்தல், மண்ணெய் ஊற்றப்பட்ட பிளாஸ்ரிக் பைகளுக்குள் முகங்களை அமுக்குதல், விரல் நகங்களைப் பிடுங்குதல், நகம் பிடுங்கப்பட்ட விரலிற்குள் ஊசிகளைச் செருகுதல், நீருக்குள் அமிழ்த்துதல், பல மணித்தியாலங்களாக கால்விரல்களில் நிற்க வைத்தல், பாலுறுப்புக்களில் சித்திரவதை போன்ற பல்வேறு சித்திரவதைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர். இவ்வாறான சித்திரவதைகளை உறுதிப்படுத்திப் பெறப்பட்ட மருத்துவ சாட்சியங்களும் சிறப்பு அறிக்கையாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
தடுத்து வைக்கப்படுவர்களுக்கு எதிராக இவ்வாறான மிக மோசமான சித்திரவதைகள் இடம்பெற்று அவை தொடர்பாக முறையீடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை 71 காவற்துறை அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அறிந்து கொண்டார். தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைதுசெய்யப்படும் போது அது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்கப்படுகிறது. ஆனாலும் இவ்வாறான சித்திரவதைகள் இடம்பெறுவதைத் தடுப்பதென்பது குறைவாகவே உள்ளது.
சிறிலங்காவில் தற்போது நிலவும் சட்ட நடைமுறைகளின் பிரகாரம், பிணையைப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் எந்தவொரு விண்ணப்பம் தொடர்பிலும் தனது முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரிப்பதற்கான உரிமையை பிரதம சட்டமா அதிபர் கொண்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சிறப்பு அறிக்கையாளர் சந்தித்துக் கலந்துரையாடினார். 70 பேர் எவ்வித குற்றங்களும் முன்வைக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 81 பேருக்கு எதிராக வழக்குகள் இடம்பெறுவதாகவும் 12 பேர் எவ்வித குற்றமும் முன்வைக்கப்படாது 10 ஆண்டுகளுக்கு மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அறிந்துகொண்டார்.
இத்தகைய புள்ளிவிபரமானது சிறிலங்காவின் அனைத்துலக மதிப்பில் கறையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அல்லது சில வாரங்களுக்குள் அல்லது மாதங்களுக்குள் இவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பல ஆண்டுகளோ அல்லது பல பத்தாண்டுகளோ இவர்கள் தடுத்துவைக்கப்படக் கூடாது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது இதன் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கத் தவறியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக சட்ட மீளாய்வை மேற்கொள்ளுமாறும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக நீதியான விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கும் வழிவகுக்கப்பட வேண்டும் என ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். காவற்துறையினரால் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அவற்றை விசாரணை செய்வதற்கான வினைத்திறன் மிக்கதொரு பொறிமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் வாக்குமூலங்கள் மற்றும் சாட்சியங்களை வழங்கியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் கோவைகளை மீளாய்வு செய்வதற்கு தனது அலுவலகம் இரண்டு ஆண்டுகள் வரை செலவிட்டதாகவும் இவர்களைப் பிணையில் விடுதல், புனர்வாழ்விற்கு உட்படுத்துதல் அல்லது இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களைக் குறைத்தல் அல்லது நீக்குதல் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர், ஐ.நா சிறப்பு அறிக்கையாளரிடம் எடுத்துக் கூறினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாது, நீதியின் முன் நிறுத்தப்படாதும் பலர் 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடயத்தில் நீதித்துறையால் அளிக்கப்பட்டுள்ள பதிலானது திருப்தியற்றதாகும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய கைதுகள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படுவதாகவும் கைதுசெய்யப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் சாதாரண குற்றவியல் சட்டம் கைக்கொள்ளப்படுவதற்கான சாத்தியங்கள் ஆராயப்படும் எனவும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனிடம் எடுத்துக் கூறியுள்ளார். அண்மைய சில மாதங்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் குறைவடைந்துள்ளமையை ஐ.நா அறிக்கையாளர் வரவேற்றுள்ளார். ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் அண்மையில் வடமாகாணத்தில் பல கைதுகள் இடம்பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சரத்துக்களை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது அனைத்துலக மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரையறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது தனது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் மாற்றத்தைச் செய்யும் போது அது தொடர்பாக அமைச்சர்களுடன் மட்டுமே ஆலோசித்ததே தவிர, மனித உரிமைகள் ஆணையகத்திடம் இது தொடர்பாக கலந்துரையாடப்படவோ அல்லது அறிவித்தல் விடுக்கப்படவோ இல்லை.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் தற்போது சில முன்னேற்றகரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுபவர்களுடன் மனித உரிமைகள் ஆணைக்குழு நேரடித் தொடர்பைப் பேணுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. பிணை வழங்குவது தொடர்பில் சட்டமா அதிபருக்கு உள்ள நிறைவேற்று அதிகாரமானது தற்போதைய புதிய சீர்திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது. இது நிர்வாக ரீதியாக முன்னேற்றத்தையும் வழங்கியுள்ளதுடன் விசாரணைக்கு முன்னான தடுப்புத் தொடர்பிலும் சுயாதீன நீதி மீளாய்வு தொடர்பாகவும் சில சலுகைகளை வழங்குவதற்கு அனுமதிக்கின்றது.
எனினும், இச்சட்டமூலமானது பல்வேறு பின்னடைவுகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக, இச்சட்டமூலம் அமுலுக்கு வரும் போது, பயங்கரவாத சந்தேகநபர்கள் தொடர்பான மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படும். தடுத்து வைக்கப்படும் காவற்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்படும் நபருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் வாக்குமூலம் வழங்குபவர் மேலும் சித்திரவதைகளுக்கு உள்ளாவார்.
சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப மாற்றப்படும் போது மட்டுமே இவ்வாறான ஆபத்துக்கள் தவிர்க்கப்படும். அத்துடன் பயங்கரவாதம் என்கின்ற பதம் தொடர்பான வரையறையில் தெளிவின்மை காணப்படுகிறது. இந்தச் சட்டமானது சிறுபான்மையினர் அல்லது மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் பாரபட்சப்படுத்தப்படுவதற்கான சிக்கலையும் உண்டுபண்ணுகிறது. அத்துடன் புதிய சட்டமூலத்தில் சாட்சியங்களைச் சேகரிப்பது தொடர்பிலும் சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. நவீன பயங்கரவாத நடவடிக்கைகள் அதாவது வெளிநாடுகளில் செயற்படும் பயங்கரவாதிகளைத் தடுப்பது உள்ளடங்கலான நவீன நுட்பங்கள் சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் உட்சேர்க்கப்படவில்லை.
அத்துடன் இந்தச் சட்டமூலத்தை சட்டமாக்கும் செயற்பாடு மிக மெதுவாக இடம்பெறுகிறது. அதாவது சிறிலங்கா அரசாங்கத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் இன்னமும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறான மாற்றங்கள் நாட்டின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் என போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகப் பொறுப்புக்கூறுவதை எதிர்க்கும் தரப்பினர் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருவதால் இதில் மேலும் தாமதம் ஏற்படுகிறது.
சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதற்கு இணங்க பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றில் விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். நாட்டில் நிலையான அமைதியை எட்டுவது தொடர்பாக பல்வேறு அறிவிப்புக்கள் வழங்கப்பட்ட போதிலும் இவற்றை அமுல்படுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆகவே தீயசக்திகள் தலையீடு செய்வதற்கு இடம்கொடுக்காது நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமும் மக்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் பேரவையின் 35வது கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அவரது ஆரம்ப உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
‘பயங்கரவாத எதிர்ப்பானது மிகவும் புத்திசாலித்தனமாகக் கையாளப்பட வேண்டும். அனைத்து மக்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பலர் பிழையான முறையில் தடுத்து வைக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கின்றனர். இவர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாகுகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது இவர்களின் குடும்பத்தவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
அப்பாவிப் பொதுமகன் ஒருவர் சிறையில் அடைக்கப்படும் போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அல்லது ஏழு பேர் அரசாங்கத்தை எதிர்க்கும் உணர்விற்கும் சிலர் அதற்கும் மேலாகவும் செல்கின்றனர். ஆகவே பிழையான முறையில் தடுத்து வைக்கப்படுவதானது மேலும் வன்முறையைத் தூண்டுவதற்கே வழிவகுக்கிறது. ஆகவே இவை தொடர்பாக நாங்கள் உறுதியான தீர்வை எட்டுவதுடன் அமைதியை எட்டுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’
வழிமூலம் – ஐ.நா தகவல் பிரிவு
மொழியாக்கம் – நித்தியபாரதி