சிரிய மோதல்: துருப்புகள் மீளப் பெறப்படாதென மக்ரோன் நம்பிக்கை வெளியீடு

சிரியாவிலுள்ள அமெரிக்கத் துருப்புகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திருப்பியழைக்க நடவடிக்கை எடுக்கமாட்டாரென்று தான் நம்புவதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பி.ஃஎப்.எம். தொலைக்காட்சி மற்றும் ஆர்.எம்.சி. வானொலிச் சேவைகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிரியாவில் அமெரிக்கத் துருப்பினர் சுமார் 2 ஆயிரம் பேர் உள்ள நிலையில், அவர்களைக் கூடிய விரைவில் திருப்பியழைக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக, வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சாரா சண்டர்ஸ் அண்மையில் தெரிவித்துள்ளார். இவரது இந்தக் கருத்தைச் சுட்டிக்காட்டியே, பிரான்ஸ் ஜனாதிபதி மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

சிரியாவின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது,’சிரியாவில் அமெரிக்கத் துருப்பினரை நீண்டகாலத்துக்கு தக்கவைக்க வேண்டிய அவசியத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு நாம் தெரியப்படுத்தியுள்ளோம். இந்நிலையில், சிரியாவிலுள்ள அமெரிக்கத் துருப்பினரை திருப்பியழைக்கும் நடவடிக்கையை, ஜனாதிபதி ட்ரம்ப் எடுக்கமாட்டாரென்று நான் நம்புகின்றேன்’ என்றார்.

எனினும், சிரியாவில் அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மட்டுப்படுத்தியுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

மேலும், சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலின்போது, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ரஷ்யா உடந்தையாக இருந்ததாகவும், இது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தான் எடுத்துக்கூறியதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நிலைகொண்டுள்ள போராளிக்குழுவினரை இல்லாதொழிக்கும் நடவடிக்கையை, சிரிய அரசாங்கப் படையினர் முன்னெடுத்துள்ள நிலையில், போராளிக்குகுழுவினருக்கும் சிரியப் படையினருக்குமிடையிலான மோதல் அண்மைக்காலமாகவிருந்து இடம்பெற்றுவருகின்றது. சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் இடம்பெற்றுவரும் மோதலின்போது, டவுமா நகரிலுள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது ரசாயனத் தாக்குதல் இம்மாதம் 7ஆம் திகதி ரஷ்யாவின் உதவியுடன் சிரியப் படையினர் நடத்திய நிலையில், பலர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இந்த ரசாயனத் தாக்குதலுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளின் ஆதரவுடன் சிரியாவில் அமெரிக்காவின் தலைமையில் கடந்தவாரம் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், சிரியாவில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பரிசோதிக்கும் நிலையம் உள்ளிட்ட இடங்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !