சிரிய உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பித்தது கனடா

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் அரசாங்கத்தின் 27 உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக கனடாவில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

27 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் உடன்படிக்கைகள் மேற்கொள்ள முடியாதவாறான தடைகள் விதிக்கப்படும் எனவும் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரிய மக்கள் மீதான அசாத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவரும்பொருட்டு சர்வதேச அழுத்தங்களின் ஒருபகுதியாக இந்த தடைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிரியாவில் இடம்பெறும் போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளில் கனடா தொடர்ந்தும் தமது ஆதரவினை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் நீடித்த சமாதானத்தை நிலைநாட்டும் பொருட்டு சிரிய ஜனாதிபதி அசாத்திற்கு நீண்டகாலமாக ஆதரவு வழங்கிவரும் ரஷ்யா தமது ஆதரவினை நிறுத்த வேண்டும் என்று இந்த வார ஆரம்பத்தில் ஃபிறீலான்ட் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !