சிரியா விவகாரம் தொடர்பில் அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: குட்டேரஸ்

சிரியா விவகாரத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பொறுமை காக்க வேண்டுமென, ஐ.நாவின் பொதுச் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலின் பின்னணியில் சிரியா ஜனாதிபதி இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதோடு அமெரிக்க படைகளையும் சிரியாவில் நிலை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால், சிரியாவில் ஏற்கனவே முகாமிட்டுள்ள ரஷ்ய இராணுவத்திற்கும், அமெரிக்காவும் மோதல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஐ.நாவின் பொதுச் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரஸ் கூறுகையில், ”சிரியா விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒருமித்த கருத்து ஏற்படாதது கவலையளிக்கிறது. நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் சிரியா பிரச்சினையில் சுமூக உடன்பாட்டை எட்ட வேண்டும்.

இந்தப் பிரச்சினை வரம்பை தாண்டிவிடக்கூடாது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு சிரியாவில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் படைகள், ஏழு வருடகால யுத்தத்தின் போது குறைந்தபட்சம் 50 முறை இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் நிக்கி ஹலீ கூறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !