சிரித்த முகமென்றால் நெருங்கிப்பழகுவார்கள்

நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் மற்றவர்கள் தங்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொள்ளும் அளவிற்கு அன்பாக பழக வேண்டும். எவரையும் உதாசீனப்படுத்துவதோ, ஒதுக்கி வைப்பதோ கூடாது. அது தேவையற்ற பிரச்சினைகள், எதிரிகள் உருவாகுவதற்கு காரணமாகிவிடும். அறிமுகமில்லாத இடத்திற்கு செல்லும்போது அங்குள்ளவர்களிடம் பேசுவதற்கு தயங்கி ஒதுங்கி நிற்காதீர்கள். அது உங்களை தனிமைப்படுத்திவிடும். மற்றவர்களும் உங்களை தனிமை விரும்பியாகவே கருதி, உங்களிடம் பேசுவதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். உங்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பவர்களிடம் பழக முயற்சி செய்யுங்கள்.

வெறுமனே புன்னகை உதிர்த்து நலம் விசாரிப்பதோடு நிறுத்தி விடாதீர்கள். அவர்கள் உங்கள் நண்பர்களிடம் அந்த அளவுக்கு பழகுகிறார்களோ, அதில் பாதி அளவுக்காவது நட்பு பாராட்ட தொடங்குங்கள். பழகிய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதற்கு பதில் மற்றவர்களையும் நண்பர்களாக்க முயற்சிப்பது உங்கள் நட்பு வட்டாரத்தை விரிவடைய செய்யும். அவர்களின் நம்பிக்கைக்குரியவராக உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களிடம் நட்புணர்வோடு பழகுபவர்களிடம் நட்பை தக்கவைத்துக் கொள்ள முழு முயற்சி எடுங்கள்.

புதிய நண்பர்களுடன் நட்புறவை பலப் படுத்தும் ஆர்வத்தில் பழைய நண்பர்களை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். பிரதி பலனை எதிர்பார்த்தும் யாரிடமும் பழகாதீர்கள். சுயநலத்துக்காக மட்டும் ஒருவரிடம் நெருக்கமாக பழகிவிட்டு, பின்பு அவரிட மிருந்து விலகி விடாதீர்கள். அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். எப்போதும் போல நட்பை பாராட்டினால்தான் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே ஓடோடி வருவார்கள்.

நண்பர்களுடன் பழக ஆரம்பித்த பொழுதில் காண்பித்த ஆர்வத்தை எப்போதும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். ‘ஏதாவது பிரச்சினை என்றால்தான் நம்மை தேடி வருவான்’ என்று எவரும் நினைத்துவிடும் அளவிற்கு நட்பை பலகீனப்படுத்திவிடக்கூடாது. நண்பரிடம் நன்றாக சிரித்துப் பேசி மகிழ்ந்துவிட்டு, பின்னர் அந்த நண்பர் இல்லாத பட்சத்தில் அவரை பற்றி மற்றவரிடம் குறைசொல்லாதீர்கள். அது ஒட்டுமொத்த நட்பு வட்டத்துக்கும் களங்கம் ஏற்படுத்தி விடும். அது உங்கள் மீது மற்றவர்கள் கொண்டிருக்கும் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும்.

எவ்வளவுதான் நெருங்கி பழகும் நண்பர்களாக இருந்தாலும் அவர்களுடைய குடும்ப விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீர்கள். நண்பர்கள் கவலையில் ஆழ்ந்திருக்கும் சமயத்தில் அவர்களை உற்சாகப்படுத்தும்படி பேசுங்கள். அதே நேரத்தில் அது அவர்களுக்கு மன வருத்தம் தரக்கூடிய வகையில் அமைந்துவிடக்கூடாது. அவர்களே விரும்பாத சூழலில் ஆலோசனை கூறாதீர்கள். அதேவேளையில் நண்பர்களின் செயல்பாடுகள் தவறாக அமையும்படி இருந்தால் தட்டி கேட்க தயங்காதீர்கள். அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தக்க ஆலோசனைகளை கூறுங்கள்.

நட்புக்கு பொறுமை மிக அவசியம். எந்த சூழலிலும் நண்பர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காதீர்கள். நிதானம் இழந்துவிடாதீர்கள். விட்டுகொடுத்து செல்லும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். அது நல்ல நட் புறவை உருவாக்கும். நண்பர்களிடம் பேசும் வார்த்தைகள்தான் நட்புறவை நீடிக்க துணைநிற்கின்றன. ஆதலால் நல்ல கருத்துக்களையே பேசுங்கள். பொதுவான விஷயங்களை பேசினால் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஒருபோதும் அடுத்தவர்களை தரக்குறைவாக விமர்சிக்காதீர்கள். நண்பர்கள் பிறரை பற்றி அவதூறு பேசுவதற்கும் இடம் கொடுத்துவிடாதீர்கள். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் சுருக்கமாக பேசுவதற்கு பழகுங்கள். மற்றவர்கள் விமர்சிக்கும் அளவிற்கு ‘வளவள’வென பேச்சை வளர்த்துக்கொண்டிருக்காதீர்கள். அது உங்களை பற்றிய அபிப்ராயத்தை மாற்றிவிடும். மறுமுறை சந்திக்கும்போது அவர்களே உங்களிடம் விரும்பி வந்து மனம் திறந்து பேசும்படி உங்கள் அணுகுமுறை அமைய வேண்டும். உங்களை பார்த்தாலே ஒதுங்கி போகும்படியோ, பேச்சை குறைத்து கொள்ளும்படியோ மாறிவிடக்கூடாது.

நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது காது கொடுத்து கேட்கிறார்களா? இல்லை அடிக்கடி குறுக்கிட்டு பேசுகிறார்களா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறுக்கீடு செய்து கொண்டிருந்தாலோ, வேறு ஏதாவது பேச முயற்சித்தாலோ உங்கள் பேச்சை அவர்கள் ஆழ்ந்து கேட்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

மற்றவர்களிடம் பேசும்போது அவர்களுடைய கண்களை பார்த்து பேசுங்கள். அவர்களும் உங்கள் கண்களை பார்த்து கேட்கிறார்களா? என்பதை கவனிப்பதும் அவசியம். வேறு எங்காவது கவனத்தை திருப்பிக்கொண்டோ, வேறு ஏதாவது செயலை செய்து கொண்டோ உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தால் அதுவும் உங்கள் பேச்சை அவர்கள் விரும்பவில்லை என்பதையே சுட்டிக்காட்டும். உங்களை பற்றி நீங்களே அதிகமாக புகழ்ந்து பேசுவதையும் தவிருங்கள். அது உங்களை தற்பெருமை பேசுபவராக நினைக்க வைத்துவிடும்.

நண்பரின் செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை வெளிப்படையாக அவரிடம் கூறிவிடுங்கள். அதை விடுத்து அவரை பற்றி மற்றவர்களிடம் குறை சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். நண்பர்களை நீங்கள் விரும்பியபோதெல்லாம் சந்தித்து பேசுவதற்கு முயற்சி செய்யாதீர்கள். அவர்களுடைய சூழ்நிலைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். தேவையில்லாத சந்திப்பு சில சமயங்களில் அவர் களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமையும்.

நீங்கள் எத்தகைய பிரச்சினையில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாதீர்கள். எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கப் பழகுங்கள். அப்போதுதான் உங்களிடம் நெருங்கி பழக ஆசைப்படுவார்கள். பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் அவர்களிடம் குடும்ப விஷயங்கள் அனைத்தையும் கொட்டிவிடாதீர்கள். அவர்கள் உடனே தங்களுடைய குடும்பத்துடன் ஒப்பிட்டு பார்க்க தொடங்கிவிடுவார்கள். ஒருசில விஷயங்கள் அவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

உங்களுடைய பிரச்சினையை விட அவர்களுடைய குடும்ப விவகாரம் சிக்கலானதாக இருக்கலாம். ‘நம்மை விட தோழி எவ்வளவோ பரவாயில்லை’ என்று உங்களுக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் இருந்தால் பரவாயில்லை. ‘நம்மை விட நன்றாக இருக்கிறாளே?’ என்ற உள்ளுணர்வு தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடுவதாக அமைந்துவிடக்கூடாது. அது அவர்களுக்குள் பொறாமையை ஏற்படுத்திவிடும். அவர்கள் மூலம் உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கும் நிலையும் ஏற்படலாம். உங்கள் நலனில் அந்த அளவிற்கு அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்து அதற்கேற்ப அவர்களிடம் பழகுவதே சிறந்தது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !