சிங்கப்பூர் ஓபனில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்- சாய்னா வெளியேற்றம்
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற சீன வீராங்கனை காய் யான்யானை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கடுமையாக போராடிய சிந்து, 21-13, 17-21, 21-14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம், இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் சிந்து அரையிறுதி வரை முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இப்போட்டியில் துவக்கம் முதலே தடுமாறிய சாய்னா முதல் செட்டை விரைவில் இழந்தார். அடுத்த செட்டில் சற்று போராடினார். ஆனாலும் அவரால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இந்த ஆட்டத்தில், 21-8, 21-13 என்ற செட்கணக்கில் ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தார். அரையிறுதியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒகுஹரா- பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.