சிகாகோ வைத்திய சாலையில் துப்பாக்கிச்சூடு: பெண் வைத்தியர் உட்பட நால்வர் உயிரிழப்பு

அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தின் மாநகரான சிகாகோவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளர்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்களும், ஒரு பொலிஸ் அதிகாரியும், கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குறித்த இரு பெண்களில் ஒருவர் வைத்தியரெனவும், மற்றையவர் மருத்துவ உதவியாளர் எனவும் சிகாகோ மேயர் ராஹ்ம் இமானுவெல் உறுதிபடுத்தியுள்ளார்.

இதன்போது, துப்பாக்கிதாரியொருவரும் கொல்லப்பட்ட நிலையில், அவர் பொலிஸாரின் பதில் தாக்குதலில் கொல்லப்பட்டாரா அல்லது தன்னைத்தானே சுட்டுக் தற்கொலை செய்துக் கொண்டாரா என்பது இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

ஒரு பெண்ணை இலக்குவைத்தே மேற்படி துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஆனால் இத்தாக்குதலின் உறுதியான நோக்கமாக இதனை பரிந்துரைக்க முடியாதெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி வன்முறைக்கு எதிராக அமெரிக்க வைத்திய நிபுணர்கள் ஒரு சில தினங்களுக்கு முன்பாக இணைய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

துப்பாக்கி வன்முறைகள் தொடர்பாக தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் இவ்வாண்டில் மாத்திரம் சுமார் 13 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !