Main Menu

‘சார்வரி’ – தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்! – மேஷம் முதல் கன்னி வரை

மேஷம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

சின்னச்சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் நீங்கள், ஒவ்வொரு செயலையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதில் வல்லவர்கள். இந்த சார்வரி ஆண்டு உங்களின் ராசிக்கு ஒன்பதாவது ராசியில் பிறப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அழகு, ஆரோக்கியம் மேம்படும். கடினமான இலக்கையும் எளிதாக எட்டிப்பிடிப்பீர்கள். கடன் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற அடிப்படை வசதிகள் பெருகும். நாடாளுபவர்களின் நட்பும் புகழும் கிடைக்கும். பணபலம் கூடும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப வளைந்துகொடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி 9-ம் வீட்டில் நிற்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைகளெல்லாம் நீங்கும். 26.12.2020 முதல் 10-ம் வீட்டுக்கு சனி வருவதால் தந்தையின் உடல்நிலை சீராகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

ஆண்டு தொடக்கம் முதல் 07.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 10-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்ந்திருப்பதால் புதுத்தெம்பு பிறக்கும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். 8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும்.

குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். 13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 10-ம் வீடான மகர ராசிக்கு வருவதால் சிறு சிறு விமர்சனங்களும், வீண் பழியும் வரலாம்; கவனமாக இருப்பது நல்லது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, காசோலை தரவும்.

சித்திரை, ஆவணி, புரட்டாசி, தை, மாசி மாதங்களில் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனக்குழப்பங்கள் நீங்கித் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். பிள்ளைகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்போது கூடிவரும். உறவினர்கள், நண்பர்கள் வியக்கும்படி கல்யாணத்தைச் சிறப்பாக நடத்திமுடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலமான நிலை உருவாகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் ராகு உங்கள் 2-ம் வீட்டுக்கு வருவதால் பேச்சில் கவனம் தேவை. அவசர முடிவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ராசிக்கு 8-ம் வீட்டுக்கு கேது வருவதால் வீண் பழி, மன உளைச்சல் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

மேஷம்
மேஷம்

23.10.2020 முதல் 17.11.2020 வரை உள்ள காலகட்டத்திலே சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

18.06.2020 முதல் 12.8.2020 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டிலேயே செவ்வாய் அமர்வதால் உறவினர்களுடன் மோதல் வந்து விலகும். தவிர்க்க முடியாத செலவுகளும் பயணங்களும் ஏற்படும்.

வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி மாதங்களில் வரவு உயரும். வராது என்றிருந்த பாக்கி வந்து சேரும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடையைத் தேடி வருவார்கள். புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். பணியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புகழ்பெற்ற நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பிக்களும் வாடிக்கையாளர்களாவார்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும். இந்த வருடம் தொடங்கும்போது சுக்கிரன் 2-ம் வீட்டில் அமர்வதால் வேலைச்சுமை குறையும். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தை, மாசி மாதங்களில் மேலதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர் பார்த்தபடி சம்பளம் உயரும். புது சலுகைகளும் உண்டு. உடன்பணிபுரிபவர்களும் உங்களுக்கு மதிப்பளிப்பார்கள் என்றாலும் 26.12.2020 முதல் சனி 10-ம் வீட்டில் அமர்வதால் அலுவலகம் மற்றும் மூத்த அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

கலைஞர்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். அரசு விருது கிடைக்கும். மூத்த கலைஞர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

பெண்களின் கனவுகள் நனவாகும். நல்ல இடத்தில் வரன் அமையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டில் உயர்கல்வி உண்டு.

மாணவ மாணவியரின் நினைவாற்றல் பெருகும். சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாவீர்கள். அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

இந்தப் புத்தாண்டு உங்களின் குறிக்கோள் களை நிறைவேற்றுவதாகவும் வசதிகளைத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்

திருச்செந்தூர் முருகப்பெருமானை சஷ்டி திதியிலோ அல்லது வியாழக்கிழமைகளிலோ சென்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் கந்தசஷ்டி கவசம் தினமும் படியுங்கள். ஆதரவற்ற மாணவியின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.

ரிஷபம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர வேறு எதையும் நம்பாதவர்கள். உங்களின் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு உண்டு. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். விலையுயர்ந்த சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்களால் நிம்மதி அடைவீர்கள்.

ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் எதிர்பாராத திடீர் யோகம் உண்டாகும். அதிகாரம் மிக்க பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். உங்களின் பேச்சுக்கு சமூகத்தில் மரியாதை கூடும். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.

14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி பகவான் அஷ்டம சனியாக இருப்பதால் யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். பண இழப்பு, காரியத் தடைகள் ஏற்படலாம்.

ரிஷபம்
ரிஷபம்

26.12.2020 முதல் 9-ம் வீட்டுக்கு சனி வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். வழக்குகள் சாதகமாகும். வீண் அலைச்சல், பல வேலைகளை இழுத்துப்போட்டுப் பார்க்கும் நீங்கள், இனி நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாகும். பாதியில் நின்று போன கட்டட வேலைகளை முழுமையாக முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்டகாலமாகப் போகாமல் இருந்த குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு

9 – ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் மன இறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு இப்போது கூடி வரும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் நடந்தேறும்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

13.11.2020 முதல் வருடம் முடியும் வரை உங்களின் பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும்.

குடும்பத்தில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சி களெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும்.

1.9.2020 முதல் கேது 7-ம் வீட்டில் அமர்வதால் வாழ்க்கைத்துணையின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். அண்டை மாநில புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வழக்குகளில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

மாசி, பங்குனி மாதங்களில் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். வர வேண்டிய பணமும் சரியான நேரத்தில் வந்து சேரும்.

17.11.2020 முதல் 12.12.2020 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதனால் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். தை, மாசி, பங்குனி மாதங்களில் புதிய முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் திறமை, உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரியின் கழுகுப் பார்வை இனி கனிவுப் பார்வையாக மாறும். தை, மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

கலைஞர்கள் அரசாங்கத்தால் கௌரவிக்கப் படுவார்கள். மூத்த கலைஞர்களிடம் தொழில் நுணுக்கங்களைக் கேட்டறிவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

பெண்கள் பெற்றோரின் பாசமழையில் நனைவார்கள். ஆடை அணிகலன்கள் சேரும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தில் வெற்றி யுண்டு. கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும்.

மாணவ மாணவியர் புத்தகத்தைத் திறந்தாலே தூக்கம் வந்த நிலை மாறும். மதிப்பெண் கூடும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.

இந்த சார்வரி வருடம் வேலைச்சுமையையும், திடீர்ப் பயணங்களையும் தந்தாலும், பண வரவையும் கௌரவத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

செங்கல்பட்டு அருகிலுள்ள திருமலைவையாவூரில் வீற்றிருக்கும் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை ஏகாதசி திதி நாளில், புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். வாய்பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள்.

மிதுனம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம்கொண்ட நீங்கள், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டீர்கள். உங்களின் ராசிக்கு 7-வது ராசியில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால், பாதியில் நின்ற பல வேலைகள் இனி முழுமையாக முடியும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வி.ஐ.பிக்கள், கல்வியாளர்கள் அறிமுகமாவார்கள்.

உங்கள் ராசியை சந்திரன் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் மன இறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு கூடும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். பொது விழாக்கள், திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

14.04.2020 முதல் 25.12.2020 வரை 7-ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 26.12.2020 முதல் அஷ்டம சனி தொடங்குவதால், பணப்பற்றாக்குறை வரலாம். யாருக்காகவும் சாட்சி, ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

14.04.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 8- ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப் பற்றாக்குறை, வீண் அலைச்சல் வந்து செல்லும்.

மிதுனம்
மிதுனம்

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அவ்வப்போது வரும் சிறு சிறு வாக்குவாதங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள் உங்களைப் பெருமைப்படுத்துவார்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக வீட்டை உங்களின் ரசனைக்கேற்ப புதுப்பிப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

13.11.2020 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று குரு பகவான் மறைவதால் வீண் அலைச்சல், ஒருவித பய உணர்வு வந்து போகும். பிள்ளைகளிடம் எதிர் மறையாகப் பேச வேண்டாம். அவர்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்.

1.09.2020 முதல் ராகு உங்களின் ராசியை விட்டுவிலகுவதால் நெருக்கடிகள் விலகும். பயம் விலகும். அழகு, ஆரோக்கியம் கூடும். கேது 6-ம் வீட்டில் நுழைவதால் வழக்கு வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பெரிய பதவிகள் தேடிவரும். திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிமாநில புண்ணியத்தலங்கள் சென்று வருவீர்கள்.

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் என எதிலும் வெற்றி கிடைக்கும். செலவுகளைக் குறைத்து சிக்கனத்துடன் சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைமையான 12.12.2020 முதல் 05.1.2021 வரை 6-ம் வீட்டிலே சுக்கிரன் மறைவதனால் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. விலையுயர்ந்த பொருள்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம்.

14.4.2020 முதல் 03.5.2020 வரை செவ்வாய் உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்வதால் மனைவியின் உடல்நலனில் கவனமாக இருங்கள்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஆவணி மாதத்தில் புது ஒப்பந்தங்கள் தேடி வரும். கார்த்திகை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். ஆவணி, கார்த்திகை மாதங்களில் புதிய வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பங்குனி மாதத்தில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

கலைஞர்களின் புகழ் கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

பெண்கள் உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். வருட மத்தியில் திருமணம் முடியும்.

மாணவ மாணவியர் தங்களின் விளையாட்டுத் தனத்தைக் குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்கள் பக்க பலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றி யுண்டு. கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். மதிப்பெண் உயரும். விரும்பிய படிப்பில் சேருவீர்கள்.

இந்த புத்தாண்டு, முதல்முயற்சியில் எதையும் முடிக்க முடியாமல் போனாலும் தொடர்முயற்சியால் சாதிப்பீர்கள்.

பரிகாரம்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், புங்கமுத்தூரில் அருள்பாலிக்கும் துர்கை அம்மனை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கடகம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

வெளிப்படையாக மற்றவர்களைச் சில நேரங்களில் விமர்சிக்கும் நீங்கள், மனிதநேயம் மிக்கவர்கள். உங்களின் ராசிக்கு 6-ம் வீடான தனுசு ராசியில் சார்வரி ஆண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக்காட்டும் வல்லமை பெறுவீர்கள். உங்களையும் அறியாமல் உங்களை அழுத்திக்கொண்டிருந்த அலட்சியப் போக்கு விலகும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உங்களுக்குள்ளே தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். தொலைநோக்கு சிந்தனை அதிகரிக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும்.

14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி பகவான், தனுசு ராசியில் நிற்பதால் வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். உங்களின் உதவியால் வளர்ச்சியடைந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உயர்பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

26.12.2020 முதல் வருடம் முடியும் வரை 7-ம் வீடான மகர ராசியில் சனி, கண்டகச் சனியாக அமர்வதால் பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

கடகம்
கடகம்

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 7-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன காரி யங்கள் விரைந்து முடியும். நட்பு வட்டம் விரிவடையும்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச்செல்வது நல்லது. யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம்.

13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

1.9.2020 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிலும் வெற்றியே கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறை மூலம் பணம் வரும். பூர்வீகச் சொத்துகளை மீட்பீர்கள். உறவினர்கள் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை ஆபரணங்கள் சேரும். எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான முடிவெடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். திடீர்ப் பணவரவு உண்டு. இந்த நேரத்தில் கேது உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும்.

ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அரைகுறையாக நின்றுபோன பணிகளை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள். அரசு வகை காரியங்கள் வெற்றியடையும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். சொந்த வீடு வாங்க முடியாமலிருந்தவர்கள் இப்போது வாங்குவார்கள். குடியிருக்கும் வீட்டில் கூடுதலாக ஓர் அறை அல்லது தளம் கட்டுவீர்கள்.

4.5.2020 முதல் 18.6.2020 வரை செவ்வாய் உங்களின் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

5.1.2021 முதல் 29.1.2021 வரை உள்ள கால கட்டத்தில் உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் புதிதாக வந்த போட்டியாளர் களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி இறக்குமதி வகைகளில் இழந்த பணத்தை மீட்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கோரிக்கைகளை ஏற்பீர்கள்.

உத்தியோகத்தில் உங்களைக் குறை கூறியவர்களே இப்போது மதித்து நடந்து கொள்வார்கள். உங்களின் சேவையை எல்லோரும் பாராட்டுவார்கள். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். இந்த ஆண்டு தொடங்கும் போது குரு 7-ம் வீட்டில் நிற்பதால் நீங்கள் கேட்ட இடமாற்றம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெறிவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமானாலும் நிச்சயம் கிடைக்கும்.

கலைஞர்கள் திறமையை வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் இறங்குவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பெரிய நிறுவனங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆண்டின் பிற்பகுதியில் அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். வைகாசியில் தவறினால், தை மாதத்தில் திருமணம் நடந்தேறும். உயர்கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள்.

மாணவ மாணவியர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேருவீர்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் அதிக மதிப் பெண்ணுடன் வெற்றிபெறுவீர்கள்.

இந்த சார்வரி ஆண்டு, பணபலத்தை உயர்த்து வதாகவும் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.

பரிகாரம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகில் திருபுவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகம்பகரேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீசரபேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள். ஏழை மாணவனுக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.

சிம்மம் தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

மற்றவர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ள நீங்கள், துவண்டுவருவோருக்குத் தோள் கொடுப்பீர்கள். உங்களின் ராசிக்கு 5-வது ராசியான தனுசு ராசியில் சார்வரி ஆண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகள், வழக்குகள், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளை வரம் வேண்டியிருந்தவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். மகனுக்கு நல்ல இடத்திலிருந்து பெண் அமைவார். மனக்குழப்பங்கள் விலகும். கனிவான பேச்சால் சண்டைச் சச்சரவுகள் குறையும். வீட்டில் சுபகாரியங்கள் சிறப்பாக நடந்தேறும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.12. 2020 வரை சனி 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளிடம் அதிகம் கண்டிப்பு காட்டாதீர்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

26.12.2020 முதல் ஆண்டு முடியும் வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். எதையோ இழந்ததைப் போல இருந்த நிலை மாறி முகம் மலரும். உற்சாகம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்ய வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

சிம்மம்
சிம்மம்

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 6-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் எதிரிகளிடம் குறிப்பறிந்து கவனமாகச் செயல்படுங்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப்போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். பூர்வீகச் சொத்துகளைச் சீர்செய்வீர்கள். வாகன வசதி பெருகும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள்.

13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் அலைச்சலும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

1.9.2020 முதல் ராகு உங்களின் ராசிக்கு 10-ம் வீட்டுக்குச் செல்வதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பதவி உயரும். சம்பளம் கூடும். நான்காம் வீட்டுக்கு கேது வருவதால் முன்கோபம், எதிலும் ஒரு சலிப்பு வந்து நீங்கும். பல காரியங்களில் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.

சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நவீன ரக எலெக்ட்ரானிக்ஸ், சமையலறைச் சாதனங்கள் வாங்குவீர்கள். வெகுகாலமாக சொந்த வீடு வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது அந்த ஆசை நிறைவேறும். சிலர் வீட்டில் கூடுதலாக ஓர் அறை கட்டுவார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தியானம், யோகா செய்யுங்கள்.

18.6.2020 முதல் 12.8.2020 வரை மற்றும் 26.10.2020 முதல் 9.12.2020 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் நிற்பதால் வீடு, மனை வாங்கும் முன் தாய்ப் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்குவது நல்லது. தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும்.

29.1.2021 முதல் 22.2.2021 வரை உள்ள கால கட்டத்தில் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவதும் நல்லது.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும் என்றாலும் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது போட்டியாளர்கள் வருவார்கள். பழைய சரக்குகளை நல்ல லாபத்துக்கு விற்று புதிதாக கொள்முதல் செய்வீர்கள். வாடிக்கையாளர்களிடமும் பங்குதாரர்களிடமும் கனிவாகப் பேசுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் கிடைக்கும். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், ரியல் எஸ்டேட் துறை, ஏற்றுமதி இறக்குமதி துறைகள் நல்ல லாபம் தரும்.

இந்த ஆண்டு பிறக்கும்போது குரு பகவான் 6-ம் வீட்டில் அமர்வதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களுக்கு விருப்பமில்லாத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். கணினித் துறையினர் புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.

கலைஞர்களுக்குச் சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களை மதிக்கத் தவறாதீர்கள். சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தாலும் தவற விடாதீர்கள்.

பெண்களுக்கு ஆண்டின் மையப்பகுதியில் நல்ல வரன் அமையும். தடைபட்ட கல்வியைத் தொடருவீர்கள்.

மாணவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாத ஆண்டு இது. தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப்பிரிவில் சேருவீர்கள்.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு திடீர் வளர்ச்சியை யும் பிள்ளைகளால் நிம்மதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள தக்கோலம் எனும் ஊரில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் ஸ்ரீதட்சணாமூர்த்தியையும் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.

கன்னி தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன்கள்

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் நீங்கள். உங்களின் ராசிக்கு 4-வது ராசியான தனுசு ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். சுப காரியங்கள் இனிதே நடக்கும்.

14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி பகவான் 4-ம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக அமர்வதால் தாயாரின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். யாரையும் எளிதில் நம்பிப் பழக வேண்டாம்.

26.12.2020 முதல் சனி 5-ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வரக்கூடும். மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டி வரும். பூர்வீகச் சொத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, பங்குனி மாதங்களில் கொடுத்த பணம் திரும்பி வரும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சொந்தம் பந்தங்கள் வியக்கும்படி திருமணத்தைக் கோலா கலமாக நடத்துவீர்கள். மகனை உயர்கல்விக்காக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்னைகளெல்லாம் நீங்கும்.

14.4.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 5-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் மன இறுக்கங்கள் குறையும். குடும்பத்திலும் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும்.

கன்னி
கன்னி

8.7.2020 முதல் 12.11.2020 வரை குரு பகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் தொடர்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். உணர்ச்சிவசப்படாமல் முடிவெடுக்கப்பாருங்கள். தாய்வழிச் சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பது நல்லது.

13.11.2020 முதல் ஆண்டு முடியும் வரை 5-ம் வீட்டுக்கு குரு பகவான் செல்வதால், எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். மகன், மகளுக்கு உயர்கல்வி, உத்தியோகம் எதிர்பார்த்த நல்ல நிறுவனத்தில் அமையும்.

1.9.2020 முதல் ராகு உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டுக்குச் செல்வதால் தந்தையுடன் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் வரும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. முக்கிய ஆவணங்களில் கவனம் தேவை. கேது ராசிக்கு மூன்றாம் வீட்டுக்கு வருவதால் தாயாரின் உடல்நிலை சீராகும். புது வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பழைய கடனைக் கொடுத்து முடிப்பீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உங்களை எதிரியாக நினைத்த பலர், இனி உங்களின் நல்ல மனத்தைப் புரிந்துகொண்டு நட்பு பாராட்டுவார்கள். குலதெய்வக் கோயிலைச் சொந்த செலவில் புதுப்பிப்பீர்கள்.

12.8.2020 முதல் 26.10.2020 வரை மற்றும் 9.12.2020 முதல் 18.2.2021 வரை செவ்வாய் 8-ம் வீட்டில் மறைவதால் சகோதரியின் திருமணத்தைப் போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.

22.2.2021 முதல் 18.3.2021 வரை சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்துவைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்க நவீன யுக்திகளைக் கையாளுவீர்கள். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக அயல்நாடு சென்று சில முக்கியஸ்தர்களைச் சந்திப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். திடீர் லாபம் உண்டு. இரும்பு, கெமிக்கல், கமிஷன் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரி களின் எண்ணத்தைப் புரிந்துகொள்வார்கள் வெகுநாள்களாக எதிர்பார்த்தும் கிடைக்காமல் போன பதவி உயர்வு ஆண்டின் முற்பகுதியில் கிடைக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் புதிய பொறுப்புகள் வரும். சக ஊழியர்களை உங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலைவாய்ப்பு வீடு தேடி வரும்.

கலைஞர்களுக்குப் பரிசும் பாராட்டும் கிடைக்கும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்கள் நட்புறவாடுவார்கள். பெண்கள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திருமணத் தடைகள் விலகும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். மாணவர்கள் விடைகளை அடிக்கடி எழுதிப் பார்ப்பது நல்லது. சமயோஜித புத்தியைப் பயன்படுத்துங்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

இந்தத் தமிழ்ப் புத்தாண்டு எதிர்பாராத திருப்பங்களையும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் அமைத்துத் தருவதாக இருக்கும்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று நெய் தீபமேற்றி வணங்குங்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். வெற்றி நிச்சயம்.

பகிரவும்...