Main Menu

சஹ்ரான் என்னை அழிப்பதற்காக வந்தவன் – ஹிஸ்புல்லா

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் என்பவர் தன்னை ஒரு முறை சந்தித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் பெயர்ப்பட்டியல் தெரிவு முடிவடைந்த பின்னர் சஹ்ரான் அவரது அலுவலகத்திற்கு தன்னை அழைத்தாகவும் அப்போது அரசியலின் அடிப்படையில் தான் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் கலந்துரையதாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சஹ்ரான் அப்போது தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை உருவாக்கி மதத் தலைவராக இருந்ததாகவும், அப்போது அவர் தீவிரவாதியாக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

2015 ஆண்டு தான் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக இருந்ததாகவும் சஹ்ரான் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பின்னர் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தின் காரணமாக அவருடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதாகவும் பின்னர் குறித்த நிபந்தனைகளை மீறியதற்காக தான் சஹ்ரானுடன் முரண்பட்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கூட்டங்களில் பாடல்கள் ஒலிபரப்ப கூடாது, பெண்கள் மற்றும் ஆண்கள் ஒன்றாக கூட்டங்களுக்கு சமூகமளிக்க கூடாது என்ற நிபந்தனைகள் தனக்கு பிடிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனால் சஹ்ரான் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்கியதால் தான் 2000 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதாகவும் தன்னை சஹ்ரானே தோற்கடித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சஹ்ரான் இப்போது இல்லை என்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அடுத்த தேர்தல் காலங்களில் எனக்கு தொல்லை இருக்காது எனவும் அதனால் எதிர்ப்பின்றி செயற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்த நியாஸ் சரீப் என்பவர் சஹ்ரானுடைய உதவியாளர் எனவும் குறித்த நபர் தனக்கு எதிராக முகப்புத்தகத்தில் பல்வேறு பதிகளை பதிவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் சஹ்ரானை காண முடியவில்லை எனவும் தான் சஹ்ரானுக்கோ அல்லது சஹ்ரான் தனக்கோ உதவி செய்ததில்லை என தெரிவித்த அவர் சஹ்ரான் தன்னை அழிப்பதற்காக வந்தவன் எனவும் தெரிவித்துள்ளார்.