சவுதி அரேபியாவை கறுப்பு பட்டியலில் இணைத்தது ஐரோப்பிய ஒன்றியம்

சவுதி அரேபியா, பனமா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த நாடுகள் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

இதனை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகி ஒருவர் நேற்று (புதன்கிழமை) அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய வங்கிகளில் இடம்பெற்ற ஏராளமான மோசடிகளின் எதிரொலியான இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், இந்நடவடிக்கை குறித்த நாடுகளுடனான பொருளாதார உறவை கேள்விக்குறியாக்கும் என தெரிவித்து பிரித்தானியா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் விமர்சித்துள்ளன.

இந்நி;லையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு சவுதி அரேபியாவும் வருத்தம் தெரிவித்துள்ளது.

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தாம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் சவுதி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பணமோசடிக்கு எதிராக அண்மையில் புதிய விதிகளை வகுத்துள்ள நிலையில் கறுப்பு பட்டியலிலிருந்து தாம் நீக்கப்பட வேண்டும் என பனாமா வலியுறுத்தியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !