சவுதியில் இன்று முதல் புதிய சட்டம் – பெண் சட்டத்தரணிகள் மகிழ்ச்சி

சவுதி அரேபியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தங்களின் விவாகரத்து தகவல்களை பெண்கள் அறியமுடியாமல் போவதை தடுக்கும் வகையில் சவுதி அரேபியா புதிய நடைமுறையை அமுல்படுத்தியுள்ளது.

இன்று முதல் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவலை குறுஞ்செய்தியாக பெண்களுக்கு நீதிமன்றங்கள் அனுப்பி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள், மனைவியிடம் கூறாமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின், `இரகசிய விவாகரத்துகளை` தடுக்கும் என அந்நாட்டு பெண் சட்டத்தரணிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த முடிவு, பெண்கள் தங்களின் திருமண நிலை குறித்த முழு விபரத்தை அறிந்திருக்க உதவுவதோடு, ஜீவனாம்சத்திற்கான தங்களின் உரிமைகளை காத்துக்கொள்ள உதவும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த புதிய சட்டம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சவுதி அரேபிய வழக்கறிஞரான நிஸரீன் அல்-அம்தி, “இந்த புதிய நடைமுறை விவாகரத்து ஆகும்போது, பெண்கள் தங்களுக்கான உரிமையை (ஜீவனாம்சம்) பெறுவதை உறுதிசெய்யும்.

மேலும், அவர்களின் விவாகரத்து தவறாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு தேவையான எந்த விதமான அங்கீகாரமும், அவர்கள் பெறுவதை இது உறுதிசெய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான், “பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடுகளில் பெண்களை பங்கெடுக்க செய்தல், அவர்களுக்கான அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.

இதுவரை ஆண்களே பணியாற்றி வந்த வேலைகளில் பெண்களை பணியாற்ற அனுமதிப்பது, பொது மைதானத்திற்கு சென்று கால்பந்து விளையாட்டை பார்ப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்“ என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆண்டு சவுதி அரேபிய பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !