சலிஸ்பரி நச்சு தாக்குதல்: ரஷ்யர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

சலிஸ்பரி நச்சு தாக்குதல் தொடர்பாக ரஷ்ய இராணுவ உளவுத்துறை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

ரஷ்ய இராணுவ உளவுத்துறை நிறுவனத்தின் தலைவர், துணை தலைவர் மற்றும் இரு முகவர்கள் ஆகிய நால்வர் மீதே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சலிஸ்பரி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த நால்வருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த நால்வருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அவர்களுக்கான நிதி உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரசாயன ஆயுத பாவனையுடன் தொடர்புடையவர்களுக்கு தடை விதிக்கும் புதிய அதிகாரத்தை ஐரோப்பிய ஒன்றியம் முதல் முறையாக பயன்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நரம்பை முழுமையாக செயலிழக்கச் செய்யும் நொவிசொக் நச்சு தாக்குதலில் மூவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நான்காவது நபர் உயிரிழந்தார்.

இந்நச்சு தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவே செயற்பட்டுள்ளதென பிரித்தானியா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தபோதிலும், ரஷ்யா அதனை தொடர்ச்சியாக மறுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !