சர்வாதிகார, சதிகார கும்பலிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்- ஓ.பி.எஸ். அணி
சென்னை தனியார் ஓட்டலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி உள்பட அனைத்து மாவட்டச் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இறுதியில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவர் பேசியதாவது:- எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் அன்பை பெற்று தமிழக அரசியலில் யாரும் வெல்ல முடியாத சக்தியாக இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அகமகிழ்ந்தோம். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது கட்சியின் தலைமை பதவியில் இருப்பவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தேர்ந்தெடுத்தால் போதாது. அடிப்படை உறுப்பினர்கள் மூலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சட்டவிதியை கொண்டு வந்தார். அதன் பிறகு அ.தி.மு.க. தலைமை பதவிக்கு வருபவர்கள் தேர்தல் நடத்தப்பட்டு தொண்டர்கள் மூலம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அந்த பதவிகளும் தொண்டர்கள் ஓட்டு போட்டுதான் உருவாக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரை இதே நடைமுறைதான் இருந்தது. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்து இரட்டை இலை சின்னத்துக்கு கையெழுத்து போட்டோம். ஆனால் இந்த வரலாறை பொதுக்குழுவில் அராஜகம் செய்து மாற்றி விட்டார்கள். பொருளாளரான என்னை பொதுக்குழுவில் அ.தி.மு.க. கணக்கை தாக்கல் செய்யக்கூட விடவில்லை. அந்த அளவுக்கு அராஜகம் நடந்தது. அந்த அளவுக்கு தலைமை பொறுப்பில் இருப்பவர் நடந்து கொண்டார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். அவரது பெயரை உச்சரிக்க விரும்பவில்லை. அந்த தகுதியை அவர் இழந்து விட்டார். அ.தி.மு.க. சட்டவிதிகளை தூக்கி எறிந்து கட்சியை தனது இரும்பு பிடிக்குள் கொண்டு செல்ல நாடகம் நடத்தினார். அந்த நாடகம் அலங்கோலமாக முடிந்தது. அ.தி.மு.க.வில் இப்போது இரண்டாவது தர்ம யுத்தம் நடந்து வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் தீர்ப்பு ஒன்று உள்ளது. அது மகேசனின் தீர்ப்பாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். அதன் பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- புரட்சித் தலைவி அம்மாவின் மறைவிற்குப் பிறகு, கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மா தான் எனவும், கழகத்தின் நிர்வாக முடிவுகளை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கழகத் தொண்டர்களால் 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுகுறித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையமும் இதனை அங்கீகரித்து விட்டது. திடீரென்று ‘பண பலம்’, ‘படை பலம்’, ‘அதிகார பலம்’ ஆகியவற்றின் துணையோடு ‘ஒற்றைத் தலைமை’ என்ற முழக்கத்தை முன்னிலைப்படுத்தி, நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய பிளவை ஒரு சர்வாதிகாரக் கூட்டம் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ரால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. இருந்தபோதிலும், ‘இரட்டை இலை’ வெற்றி பெற வேண்டுமென்பதற்காக கழகம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொண்டது. இவ்வளவுக்குப் பிறகும், ‘இரட்டை இலை’ வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நிலவுவதாக அ.தி.மு.க. தொண்டர்கள் கருதுகிறார்கள். ஒரு சர்வாதிகாரக் கும்பல் அ.தி.மு.க.வை அபகரிப்பதை தடுக்கும் வகையில், இன்று நடைபெற்ற அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக்கழக செயலாளர்கள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. என்னும் தொண்டர்கள் இயக்கத்தை, மக்கள் இயக்கத்தை, சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுப்பது என தீர்மானிக்கப்படுகிறது. அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி அம்மாதான் எனத் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது மாவட்டம் தோறும் நியமனம் செய்யப்பட்டு வரும் நிர்வாகிகளின் பணியை மேலும் துரிதப்படுத்தி, விரைவில் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது. ‘புரட்சித் தலைவர் எம்.ஜிஆரின் பிறந்தநாள் விழா’, ‘புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா’ மற்றும் ‘கழகத்தின் பொன் விழா’ என முப்பெரும் விழாவினை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்த தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.