சர்வதேச மகளிர் தினம் – அனைத்துலக பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

இன்றைய தினம் மார்ச் 8ஆம் திகதி. உலகம் முழுவதும் மகளிர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக தோழியாக காதலியாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது.
இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களை போற்றும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர்.
அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களுக்கும் TRT தமிழ் ஒலி சார்பில் இன்றைய நாளில் மகளிர் தின வாழ்த்துக்கள்.

மகளிர் தின வரலாறு
பெண்கள் தினம்… அதுவும் சர்வதேசப் பெண்கள் தினம்! இப்படி எல்லாம் ஒரு நாளைச் சொல்லி நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலையில் இருக்கிறோம். மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் வழுக்கிப் பின்னோக்கி நழுவினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்கு அறியக் கிடைக்கிறது.

1789ம் ஆண்டு ஜூன் 14-ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன் வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!

கிளர்ச்சிகள் என்றால் ஏனோதானோவென்று இல்லாமல் அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு பாரீஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாக கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று கர்ஜித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் என அறிவித்தான். எதுவரினும் சந்திப்போம் என்று அஞ்சாமல் இரவு முழுக்க தெருக்கூட்டம் நடத்தி காலையில் அரசமாளிகை நோக்கி அணி வகுத்துக் கிளம்பினர்.

ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரை புரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது.

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்காப்பளர் இருவரையும் திடீரென பாய்ந்து தாக்கி கொன்றனர். இதைக் கேட்ட அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன், என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போக அரசன் லூயிஸ் பிலிப் முடி துறந்தான்

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட.. ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் துவங்கியது. அடிக்கிறபடி அடித்தால்தானே அம்மியும் நகரும்; இத்தாலியிலும் பெண்கள் வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் (Prussian King) இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம் பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும்! அந்த மார்ச் 8ம் நாள் தான் சர்வதேச பெண்கள் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்பட வித்தாக அமைந்தது.

நியூயார்க்:

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அகன்றிட உலக அளவில் அனைவரும் ஒருங்கிணைந்து பெண்களின் மேம்பாட்டிற்கான சில பொது நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனை உதயமான இடம்… அமெரிக்கா. அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க். இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணி நேரம் வேலை செய்து குறைவான ஊதியத்தையே பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடிக் குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் துவங்கிய பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908ல் எங்களுக்கு வாக்குரிமை கிடையாதா? என்று கிளர்ந்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910ல் கோபன்ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.

மார்ச் 8

அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில்தான், அரசன் லூயிச் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ஐ நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்! இந்த மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிய பெண்கள் ஜெர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப் பிரசுரங்களை நாடெங்கும் வினியோகித்தனர்.

ஜெர்மனியில் மகளிர் துவங்கி வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்னைகளுக்காக போராட வேண்டும்; போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் துவங்கினர்! அன்று துவங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காலத்தின் தேவைக்கேற்ப அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்.

இன்றைக்கு பெண்கள் இல்லாத துறை உண்டா? மண்ணிலிருந்து விண்ணிற்கும், அலுவலரிலிருந்து ஆய்வாளர் வரையிலும், நிதியிலிருந்து நீதித் துறை வரையிலும் என்று சகல துறைகளிலும் முகம் காட்டுகின்றனர்! அதிகாரங்களில் தலைமைப் பதவிக்கும் வந்தனர்; ஆண்களுக்கு நிகராக பல துறைகளில் பிரகாசிக்கின்றனர்; நோபல் பரிசுகளை வாங்கிக் குவித்தனர்; ஆட்சியைப் பிடித்தனர்; அப்படி ஆட்சியில் அமர்ந்தாலும், அவர்களால் அங்காவது பெண்கள சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முற்றிலுமாக களைந்தார்களா? களைய முடிந்ததா? என்ற கேள்விகள் ஒரு புறம் வலுவாக எழுந்தாலும் அடி நாளில் அவர்கள் மனங்களில் எங்களாலும் முடியும் என்ற விதை இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்றால் மிகையில்லை!


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !