சர்வதேச நிபுணர்களின் பிரத்தியேக கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகள் தவிர்ப்பு
ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் குறித்த முடிவுக்கு இலங்கை அரசாங்கம் முறையான பதிலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு போருக்கு பின்னர் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது தீர்மானத்தின் விதிகளை விரைவாக அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமீபத்தில் கூறியது.
அதன்படி போரின் போது மற்றும் அதற்குப் பிறகான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தகவல் சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவை இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, இலங்கையை கண்காணிக்க ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் குழுவை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் திரட்டி வருகின்றது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்ல, இந்த விசாரணைக் குழுவில் இலங்கையின் பிரதிநிதியைத் தவிர்ப்பதற்கான அவர்களின் முடிவு குறித்து அரசாங்கம் விரைவில் முறையான பதிலை அளிக்கும் என கூறியுள்ளார்.
இருப்பினும் நிதிப்பற்றாக்குறை செயல்முறைகளை மேற்கோள் காட்டி சர்வதேச நிபுணர்கள் குழு பெரும்பாலும் ஜெனீவாவில் இருக்கும் என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கூறியிருந்தது.
இவ்வாறு பெயரிடப்பட்டவர்களில் பலர் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பின்னணிக்கு அந்நியர்கள் என்பதால் அத்தரப்பினரால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களின்படி செயற்படுவதன் ஒருதலைப்பட்ச நடவடிக்கை என அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்ல சுட்டிக்காட்டினார்.
இலங்கை தொடர்பான ஐ.நா. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற தீர்மானம் இந்த ஆண்டு மார்ச் 23 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற 46 வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...