சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21)

வங்காளதேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பொது மாநாட்டின் 30ஆவது அமர்வில் இந்நாள் அனைத்துலக தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டது.

 பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சர்வதேச தாய்மொழி தினத்திற்கான சிறப்புக்கவி
“ தாய்மொழி எம்தமிழ் “
கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 21,02,2019

அமுதுக்கு ஒப்பாகி
அழகியலுக்கு உரித்தாகி
அட்சய பாத்திரமாகி
அகமும் புறமும் இணைவாகி
அடையாளம் காட்டுமே
அன்னை மொழியாம் எம்தமிழ் !

இளமை வளம் குன்றாத
இனிமைத் தரம் மாறாத
இலக்கண இலக்கிய மரபாகி
இசைக்கு அசைந்து சிறப்பாகி
இன்று வரையும் ஜீவநதியாகி
அறிதலுக்கும் புரிதலுக்கும் துணையாகி
ஆராட்சி செய்திட தூண்டிடுமே
எம் தாய்மொழியான தமிழ் மொழி !

பண்பாட்டின் ஒளியாகி
நல் வழிகாட்டும் விழியாகி
எமை செதுக்கும் உளியாகி
சிந்தனைத் திறனாகி
முந்தை மொழியாகி
எம் மூச்சாகி பேச்சாகி
உணர்வோடு கலந்த உயிர்மொழி
தாய்மொழியான எம்தமிழ் மொழியே !

தெய்வ மொழியென பெயராகி
எமை தாலாட்டி சீராட்டி
உலக மொழிகளோடு போட்டியாகி
முதல் மொழியென சிறப்பாகி
செம் மொழியென அங்கீகாரமாகி
இன்றும் கணணி மொழி சொற்களை
கடுகதியென தந்திடும் ஒப்பற்ற மொழி
எம் தாய்மொழியான தமிழ் மொழியே !

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
முச்சங்கம் அமைத்து
முறையாக தமிழை வளர்த்து
எழுத்து மொழியில் ஏறுநடை போட்டு
வாழ்வியல் மொழியாகி செழித்து
வரலாற்றில் தடம் பதித்து
இன்று செம்மொழியாகி
நிலைத்து நிற்கிறதே எம் தாய்மொழி !

தாய்மொழிக்கு ஓர் தினத்தை
தரணியிலே நிலைத்துவிட
மாசித் திங்கள் இருபத்தியொன்றை
மகிழ்வாய் தந்ததே ஐ..நா.வும்
மகிழ்வோடு போற்றிடுவோம் !


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !