சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியில் சிறந்த நிலையை எட்டியது கட்டார்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசியக் கிண்ண கால்பந்து தொடரில் மகுடம் சூடியதன் மூலம், கட்டார் கால்பந்து அணி சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியில் சிறந்த ஏற்றத்தைக் கண்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், கட்டார் அணி, நான்கு முறை சம்பியன் அணியான ஜப்பான் அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக வாகை சூடியது.

இதன் மூலம், 26 ஆண்டுகளுக்கு பிறகு உலக கால்பந்து தரவரிசைப் பட்டியில் 55ஆவது இடத்திற்கு கட்டார் அணி முன்னேறியுள்ளது.

ஆசியக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்னதாக, 93ஆவது இடத்தில் இருந்த கட்டார் அணி, ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் வெற்றியின் பின்னர், 38 இடங்கள் முன்னேறி 1398 புள்ளிகளுடன் 55ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அத்தோடு, ஆசியக் கால்பந்து அணிகளில் ஐந்தாவது சிறந்த அணியாக, உலக கால்பந்து தரவரிசைப் பட்டியில் கட்டார் அணி இடம்பிடித்துள்ளது.

இந்த பட்டியலில, ஈரான் ஏழு இடங்கள் முன்னேறி 1516 புள்ளிகளுடன் 22ஆவது இடத்திலும், ஜப்பான் 23 இடங்கள் முன்னேறி 1495 புள்ளிகளுடன் 27ஆவது இடத்திலும், தென்கொரியா 15 இடங்கள் முன்னேறி 1451 புள்ளிகளுடன் 38ஆவது இடத்திலும், அவுஸ்ரேலியா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 1441 புள்ளிகளுடன் 42ஆவது நிமிடத்திலும் உள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக்கிண்ண கால்பந்து தொடர், எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இத்தொடரை நடத்துவதற்கான கால்பந்து விளையாட்டு அரங்குகளின் நிர்மாணப் பணிகளை, கட்டார் அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.

22ஆவது அத்தியாயமாக நடைபெறும் கட்டார் கால்பந்து உலகக்கிண்ணம், மத்திய கிழக்கு நாடொன்றில் முதன்முறையாக நடைபெறும் முதல் உலகக்கிண்ண தொடராகும்.

கால்பந்து உலகக் கிண்ண தொடரானது வழக்கமாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் இல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !