சர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒன்று குறைந்த எடையில் பிறக்கிறது- ஆய்வில் தகவல்
சர்வதேச அளவில் 7 குழந்தைகளில் ஒரு குழந்தை குறைந்த எடையில் பிறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் பற்றிய ஆய்வை நிபுணர்கள் குழு மேற்கொண்டது. இந்த ஆய்வு 148 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.
அதில் கடந்த 2015-ம் ஆண்டில் பிறந்த 2 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் 2.5 கிலோ எடைக்கும் குறைவாக இருந்தன என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இது 7 குழந்தைகளில் ஒரு குழந்தை எடை குறைவாக பிறக்கிறது என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் பிறந்துள்ளன.
சகாரா ஆப்பிரிக்கன் நாடுகளில் எடை குறைந்து பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2000 முதல் 2015-ம் ஆண்டு வரை 44 லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து 50 லட்சமாக அதிகரித்துள்ளது.
தெற்கு ஆசிய நாடுகளில் 2015-ம் ஆண்டில் 90 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் குறைந்த எடையில் பிறந்து இருக்கின்றன. இது உலக அளவில் பாதி என கணக்கிடப்பட்டுள்ளது.
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் பல உடல் நலக்கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
நீரிழிவு, இருதய நோய்கள் போன்றவற்றின் தாக்குதலுக்கு அவர்கள் ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அவர்களில் பலர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
எனவே இத்தகைய குறைபாட்டை போக்கி எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளின் அளவை குறைக்க சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.