சர்வதேசத்தை ஏமாற்ற பொய்யான அறிக்கைகள்: கேப்பாப்புலவு மக்கள் ஆதங்கம்

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அரசாங்கத்தின் தரவில், கேப்பாப்புலவு உள்ளடங்கவில்லையென அப்பிரதேச மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இம்மக்கள் ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம் 598ஆவது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில், விடுவிக்கப்படவுள்ள காணிகளில் தமது பிரதேசம் உள்ளடங்காமை வேதனையளிப்பதாக அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த இரண்டு வருட காலமாக வெயிலிலும் மழையிலும் நுளம்புக் கடிக்கு மத்தியில், உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டு தாம் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக இம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தமது பிள்ளைகளின் கல்வியும் இதனால் பாதிக்கப்படுகின்றதென சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில், சகல காணிகளும் டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படுமென ஜனாதிபதி கூறிய வார்த்தையை பொய்யாக்கும் வகையில் தற்போதைய அறிவிப்பு காணப்படுகின்றதென கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள அடுத்த ஜெனீவா அமர்வை முன்னிட்டு ஒரு கண்துடைப்பாகவே சில காணிகளை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், சர்வதேசம் இவ்விடயத்தில் தலையிட்டு தமது பூர்வீக காணிகளை பெற்றுத்தர வேண்டுமென இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !