சமூக வலைதளங்களில் தேர்தல் குறித்த கருத்துகள் பகிர்வதை தடுக்க முடியாது: தேர்தல் ஆணையம்

தேர்தலுக்கு முதல்நாள் இருதினங்களில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்படுவதைத் தடுக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (வெள்ளிக்கிழமை)தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் தேர்தல் மற்றும் அரசியல் தொடர்புடைய கருத்துகளை தேர்தல் நடைபெறும் இருதினங்களுக்கு முன்பு அரசியல்வாதிகள் அல்லது தனிநபர்கள் பகிர்வதை தடுக்க வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வழக்கறிஞ்சர் பிரதீப் ராஜகோபால் ஆஜராகி முன்வைத்த வாதங்களில்,

“மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126ஆவது பிரிவு, தேர்தல் நடைபெறுவதற்கு இருதினங்களுக்கு முன்பு, பொதுக் கூட்டங்கள், ஊர்வலம், பிரசாரம் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கின்றது. அந்த இரதினங்களும் பணம் கொடுத்து விளம்பரங்கள் வெளியிடுவதற்கும் இந்தப் பிரிவு தடை விதிக்கின்றது.

எனினும், தனிநபர்கள் தங்களுடைய சமூக வலைதள கணக்கில் தேர்தல் தொடர்புடைய கருத்துகளை வெளியிட்டால் அதை எவ்வாறு எங்களால் தடுக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பொது நல மனுத்தாரர்  சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சரின் வாதங்களில்,

“பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பணம் கொடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதுபோன்ற நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற முடியும்” எனக் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்ட தலைமை நீதிபதி நரேஷ் பாட்டீல் மற்றும் நீதிபதி என்.எம்.ஜம்தார் ஆகியோர் அடங்கிய முன் அமர்வுகளில், சமூக வலைதளங்களில் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு கட்சி மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகள் பகிரப்படுவதை ஒழுங்குப்படுத்துவதற்கான ஆலோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று இருதரப்புக்கும் அறிவுறுத்தியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !