சபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை

சபரிமலைக்கு சென்ற இரு பெண்கள், தங்களுக்கு பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாமென உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கடும் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தும் செயற்பாட்டில் கேரள அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா (வயது-44), பிந்து (வயது-42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பனை அண்மையில் வழிபட்டதுடன் இருவருக்கும் மாநில அரசு தொடர்ச்சியாக பாதுகாப்பு வழங்கி வருகின்றது.

இவ்வாறான சூழலிலும்கூட கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

ஆகையால் சபரிமலைக்குச் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு கருதி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால், வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

எங்களுக்கு எதிராக தவறான சொற்களைப் பயன்படுத்துபவர்கள், சமூக வலைதளங்களில் எங்களை விமர்சிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

குறித்த மனுவே, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !