சபரிமலை விவகாரம்: இறுதி முடிவு அறிவிப்பு
சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின்படி தற்போதைய நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து வயதுப் பெண்களும் தற்போது சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலையே கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: “பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது. இந்த வழக்கில் மதம் சார்ந்த விடயங்களை கவனத்தில் கொண்டோம். எனவே இந்த விடயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம். சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின்படி தற்போதைய நிலை தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் திகதி உத்தரவிட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் பெண்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பையும், நீதிபதி இந்து மல்கோத்ரா மத விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் தீர்ப்பை வழங்கினர்.
பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துப்படி சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு செயற்படுத்த முயன்றபோது அதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. கேரளாவில் பரவலாக வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.
இதையடுத்து தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் 4 புதிய ரிட் மனுக்கள் உள்ளிட்ட 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது சீராய்வு மனுக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
நாயர் சர்வீஸ் சமூகம், சபரிமலை கோயில் தந்திரி, கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசுத் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
சபரிமலை கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை கேரள அரசு தொடர்ந்து ஆதரித்தது. சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து நீதிமன்றம் கவலைப்படக் கூடாது எனவும் கேரள அரசு கூறியது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முதலில் எதிர்த்த தேவசம் போர்ட் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்றது.
தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் வாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கு கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
பகிரவும்...