சபரிமலை விடயத்தில் கேரளமக்களே முடிவெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி

சபரிமலை விவகாரத்தை கேரள மக்களின் முடிவுகளுக்கே விட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதை ஆதரிப்பதாகவும், அதனை வைத்து பா.ஜ.க அரசியல் செய்வதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினருடன் சபரிமலை விவகாரம் தொடர்பாக கூறியுள்ளேன். அவர்கள் தற்போதைய நிலைமையை எடுத்துரைத்தனர். முன்பிருந்ததைவிட கேரளாவில் தற்போது நிலைமை மிகவும் சிக்கலாகவே உள்ளது என்பதை இதன்மூலம் உணர்ந்து கொண்டேன்.

இதற்கு முதல் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தேன். பாரம்பரியமும் காக்கப்பட வேண்டுமென்ற கருத்தையும் தற்போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, சபரிமலை விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாத நிலைமையில் இருக்கின்றேன்.

சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை அந்த மாநில மக்களே முடிவு செய்ய வேண்டும்” என இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலையில் அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாதகாலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சபரிமலை விவகாரத்தில் அரசைக் கண்டித்தும் கோயிலில் பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியும் போராட்டம் நடத்திவருகின்றமை குறிப்படத்தக்கது.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !