சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சசிகலா என்ற இலங்கையைச் சேர்ந்த பெண் சுவாமி தரிசனம் செய்தமைக்கான காணொளி ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சபரிமலையில் தனக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென சசிகலா தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கேரளா பொலிஸார் இக்காணொளியை வெளியிட்டுள்ளனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிப்படலாமென உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரளாவில் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இதுவரை 50 வயதுக்கும் குறைந்த மூன்று பெண்கள் சமரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். ஏற்கனவே பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்தமையால் அங்கு வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் இலங்கை பெண் ஒருவர் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த சசிகலா நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சபரிமலைக்கு சென்று 18 படிகள் வழியாக ஏறி, ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், தனக்கு சுவாமி தரிசனம் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென சசிகலா கூறினார்.

இந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்யும் காணொளியை கேரளா பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை சபரிமலையில் தொடரும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் எதிர்வரும் ஐந்தாம் திகதிவரை அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

மேலும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். எவ்வாறாயினும் முதல்வரின் செயற்பாடுகளை கண்டித்து புதுடெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !