சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு கோரிக்கை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு பாதுகாப்பு பிரிவு, பொது மக்களிடம் கோரியுள்ளது.
இதற்காக இராணுவ தலைமையகம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
0112 434 251, 0114 055 105, 0114 055 106, 0112 433 335 மற்றும் 0766 911 604 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இராணுவத் தலைமையகத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவை தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும் என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
இதனுடன் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வாகனங்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் 116 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக அழைத்து தகவல் வழங்க முடியும் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு வாகனங்களை நிறுத்தும் போது அதில் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை காட்சிப்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.
கிடைக்கப்படும் தகவல்களுக்கு அமைய வீதிகளை மறித்து மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்காக பொது மக்கள் பதற்றமடைய தேவையில்லை என காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சருமான ருவான் குணசேகர கோரியுள்ளார்.
அத்துடன், தேவையற்ற வதந்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மற்றும் புறநகர்களில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.