சசிகலா, தினகரனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அ.தி.மு.க.வில் வகித்துவந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

சசிகலா மற்றும் தினகரன் தரப்பினர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றபோது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயற்பட்டனர். அதன்பின்பு, இரு தரப்பினரும் ஒன்றிணைந்து கடந்த வருடம் செப்டெம்பர் 12ஆம் திகதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பொதுச்செயலாளர் என்ற பதவியும் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே சசிகலா மற்றும் தினகரன் தரப்பினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை ஏற்கனவே செயல்பட்டு வந்த புரட்சித்தலைவி அம்மா அணி, அம்மா அணி என்ற அணிகள் தற்போது இல்லாத காரணத்தினால் தங்களது மனுவில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம்19ஆம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அ.தி.மு.க.வின் திருத்தங்கள் மற்றும் உறுப்பினர் நியமனங்களுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையகம் ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !