சசிகலா குடும்பத்தை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன்: ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை!

நாமக்கல்லில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகம் ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மீள வேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். குரல் கொடுத்தார். ஆனால் அவரை ஒரு சாதாரண பந்து என்று நினைத்தார்கள். அந்த பந்து வெடிகுண்டாக வெடித்தது. எம்.ஜி.ஆர். தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்தது.

அவரை தொடர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மக்களுக்கு தேவையான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்தினார். எதிரிகளின் சதிகளையும், சூழ்ச்சிகளையும் முறியடித்து சிறப்பான முறையில் ஆட்சி நடந்தது. அவர் காட்டிய நல்வழியில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஆனால், ஜெயலலிதா ஏற்படுத்தி கொடுத்த இந்த ஆட்சி தொடரக்கூடாது என சிலர் திட்டம் போடுகிறார்கள். இந்த சதித்திட்டத்தை தவிடு பொடியாக்கும் ஆற்றல், அவருடைய விசுவாச தொண்டர்களிடம் உள்ளது. எதிரிகள், துரோகிகளை எப்படி எதிர்கொள்வது என்பதை ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. மலையோடு மோதினால் மலை உடையாது, மோதுகிறவர்களின், தலை உடைந்து சிதறிப்போகும் என்பதை ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக சொல்ல விரும்புகிறேன்.

தி.மு.க. குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர துடித்துக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள். மீண்டும் தமிழகத்தில் குடும்ப ஆட்சியை கொண்டுவர, குடும்ப ஆட்சி நடத்தியவர்களுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் நல்லாட்சிக்கு பல்வேறு இடையூறுகளை செய்து ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள். நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்பார்கள். உங்களுடைய பிழைப்பு கெட்டால் கவலை இல்லை, ஆனால் தமிழக மக்களின் பிழைப்பை கெடுத்தால், மக்களாலேயே நீங்கள் விரட்டியடிக்கப்படுவீர்கள்.

ஜெயலலிதா இல்லாத ஆட்சி தானே என சிலர் துள்ளி விளையாட நினைக்கின் றனர். இந்த நினைப்பு உள்ளவர்களும் தமிழக மக்களின் துணையோடு கிள்ளி எறியப்படுவார்கள்.

நாங்கள் இணைந்தது சில பேருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியும், கட்சியும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு சென்றுவிடாமல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பார்த்துக்கொண்டனர். அதை நாங்கள் செய்வதால் இந்த ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள்.

சில கொள்கைக்காக நாம் தனித்தனியே நின்று போராடினோம். இப்போது ஒன்று சேர்ந்து உள்ளோம். எதற்காக என்றால் அ.தி.மு.க. என்ற கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்திற்குள் சென்றுவிடக்கூடாது என்பதால் தான். எங்களுக்கு எந்த பதவியும் பெரிதல்ல.

நானும், எடப்பாடி பழனிசாமியும் சாதாரண நிலையில் இருந்து தான் இந்த நிலைக்கு உயர்ந்து உள்ளோம். எங்களை பார்த்து சுயநலத்திற்காக இணைந்துள்ளதாக கூறுகிறார் கள். ஆனால் சுய நலத்துக்காக ஒரு குடும்பத்திற்கு கட்சியையும், ஆட்சியையும் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அது முடியாததால் இவ்வாறு பேசுகின்றனர்.

அவர்கள் ஜெயலலிதாவுக்கு உண்மையானவர்கள் இல்லை. துரோக செயல்களை செய்தவர்கள். 2014-ம் ஆண்டில் அந்த குடும்பத்தை சேர்ந்த 16 பேரை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். அப்போது என்னை அழைத்து, தினகரனுடன் பேசக்கூடாது என்றார். மேலும் தான் உயிரோடு இருக்கும் வரை அவரை வீட்டிற்குள் விடமாட்டேன் என ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறையும் என்னை அழைத்து கூறியதுண்டு.

ஏற்கனவே சசிகலா குடும்பம் குறித்த ரகசியத்தில் 10 சதவீதம் சொல்லி உள்ளேன். இது 1 சதவீதம், இன்னும் 89 சதவீதம் உள்ளது. அவர்கள் தொடர்ந்து என்னை ஏதாவது சொன்னால், நானும் தொடர்ந்து பல ரகசியங்களை வெளியிடுவேன். இதனால் இதோடு அவர்கள் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !