சசிகலாவுக்கும், தினகரனுக்கும் ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். துரோகம் செய்து விட்டனர்: தங்கதமிழ்செல்வன்

இந்த கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் நாங்கள் எம்.ஜி.ஆர்.பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம், இலவச வேட்டி சேலை போன்ற பல நல்ல திட்டங்களை ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரவில்லை. தான் பட்ட கஷ்டத்தைப் போல் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகத்தான் கொண்டு வந்தார்.

பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த எம்.ஜி.ஆர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை விரைவு கப்பல் விடும் திட்டத்தையும், சென்னை தலைநகரத்தை திருச்சிக்கு மாற்றவும் நினைத்து இருந்தார். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இதனால் அவர் நினைத்த அந்த திட்டம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. வருங்காலத்தில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அமையும் ஆட்சியில் எம்.ஜி.ஆர். நினைத்த அந்த திட்டங்கள் நிறைவேற பாடுபடுவோம்.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆரைப் பற்றி பேசாமல் எங்களை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது என்று பேசுகிறார். ஆனால் நாங்கள் சொல்வது என்னவென்றால் புதிய மந்திரி சபை அமைப்போம் என்றுதான் சொல்கிறோம். முதல் அமைச்சர் கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதாக பேசுகிறார். மேடையில் நாகரீகமாக பேச வேண்டும். தலைமைக் கழகத்தில் இருந்து சசிகலா படத்தை அகற்றுவதற்கு பா.ஜ.க.வின் மத்திய அரசுதான் காரணம் என்று சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

யாரும் துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள். செய்த உதவியை மறந்தால் அவர்கள் குடும்பத்திற்கே மன்னிப்பு கிடையாது. சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் துரோகம் செய்துவிட்டனர். தற்போது உள்ள ஆட்சியை விரைவில் தூக்கி எறியும் காலம் வரும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட என்னையும், வெற்றிவேல் போன்றவர்களையும் கட்சி பதவியில் இருந்து நீக்கியதுபோல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்காததற்கு காரணம் என்ன? மத்திய, மாநில அரசுகளின் எதிர்ப்பு, அரசு பல சலுகைகளை அளித்தும் ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறவில்லை.

டி.டி.வி.தினகரன் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். துரோகத்தை மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் டி.டி.வி. தினகரன் தலைமையில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும்.

கன்னியாகுமரியில் ஓக்கி புயலால் ரூ.ஆயிரம் கோடி அளவுக்கு விவசாய பொருட்கள் சேதம் அடைந்தது. ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை புதிய கட்சி தொடங்கப்படுவதாக அறிவித்துள்ள நடிகர்கள் ரஜினியும், கமலும் சந்திக்காதது ஏன்? பஸ் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இது பற்றி கேட்டார்களா? இப்படிபட்டவர்களை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். ஜெயலலிதா இல்லாத நேரத்தில் நடிகர்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளனர். யார் வேண்டு மானாலும் அரசியலுக்கு வரலாம். அது பற்றி கவலையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டி.டி.வி. தினகரனை கைது செய்ய சொல்ல அமைச்சர் ஜெயக்குமாருக்கு அருகதை இல்லை. மக்களிடம் தவறான கருத்துகளையும் பொய்களையும் சொல்லி வரும் ஜெயக்குமாரை தான் கைது செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் சடலம் போல் வைத்து ஓட்டு கேட்டவர் ஒ.பி.எஸ். அவரை சேர்த்து துணை முதல்- அமைச்சர் பதவி கொடுத்தது மலிவான அரசியல் இல்லையா? தவறான கருத்து அது. வன்மையாக கண்டிக்கிறோம்.

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்த வழக்கிற்கான தீர்ப்பு 22-ந் தேதி வர உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என நம்புகிறோம். மேலும் அந்த தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் சொன்னாலும், செல்லாது என சொன்னாலும் சந்தோ‌ஷம் தான். செல்லும் என்று சொன்னால் இடைத்தேர்தல் வரட்டும். அதில் நாங்கள் நின்று ஜெயித்து சட்டமன்றத்திற்குள் வருவோம். தற்போது தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. 18 சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்று டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆட்சி அமைப்போம்.

டி.டி.வி. தினகரன் கட்சி தொடங்கினால் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் அ.தி.மு.க.வில் தான் நாங்கள் தொடருவோம். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்காக கொண்டு வந்த செல்போன் வழங்கும் திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை.

எங்கள் தொகுதியிலேயே 25 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்படவில்லை . முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சருக்கு இடையே ஒற்றுமை இல்லை. போட்டி நடக்கிறது. இதில் நிர்வாகத்தை நடத்த யாரும் தயாராக இல்லை. நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது எடுபடாது. மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !