கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் 1.28 இலட்சம் சிறுவர்கள் உயிரிழப்பர்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு 1.28 இலட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 4 பிரிவுகள் தயாரித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பகுதிகளுக்கும், அவை நுகரப்படும் சந்தைகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10,000 வரையிலான சிறுவர்கள் பட்டினியால் உயிரிழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊட்டச் சத்துப் பற்றாக்குறை பிரச்சினை வெகுவாக அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் 5.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு ஊட்டச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, கைகால்கள் மெலிதல், வயிறு ஒட்டிப் போதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டில் 4.7 லட்சம் சிறுவர்கள் இத்தகைய ஊட்டச் சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டில், அந்த எண்ணிக்கையைவிட கூடுதலாக 67 லட்சம் சிறுவர்கள் ஊட்டச் சத்துப் பற்றாக்குறை நிலைக்கு உள்ளாவார்கள். ஊட்டச் சத்து இல்லாமல் கைகால்கள் மெலிதல், வயிறு ஒட்டிப் போதல் ஆகிய பிரச்னைகளைச் சந்திக்கும் சிறுவர்களுக்கு, அது உடல் அளவிலும், மனதளவிலும் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.