கொழும்பில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு – 100 பேர் வரை உயிரிழப்பு!

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது தற்போதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சீயோன் ஆலயத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 25பேர் உயிரிழந்துள்ளதுடன் 75பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தககவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஹோட்டல்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.
கொழும்பில் குறைந்தது 24 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அந்தந்த பகுதியில் இருக்கும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்தக்கலாம் என்று அங்கிருக்கும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். கொழும்பு கொச்சிகடை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்
காயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இதில் சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர, இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்துள்ளார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வரும் பாதையில் சோதனைகளும் இடம்பெறும். அத்துடன் பார்வையாளர் பகுதி மூடப்பட்டுள்ளது. விமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள் வளாகத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-BBC
பகிரவும்...