கொல்லப்பட்ட ஈரான் தளபதியின் இறுதி ஊர்வலம்: அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பு
அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஈரானின் புரட்சிப் படையணியின் தளபதி காசிம் சோலெய்மனியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த இறுதி ஊர்வலம், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. அலங்கரிக்கப்பட்ட காரில் சோலெய்மனியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் அமெரிக்கக் கொடியையும், ட்ரம்ப்பின் படத்தையும் தங்கள் கால்களினால் மிதித்து எதிர்ப்பைப் பதிவு செய்தள்ளனர்.
இந்த ஊர்வலத்தின் போது, சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பின்னணி:
ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தை சேதமாக்கினர்.
இதற்குப் பதிலடியாக நேற்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க இராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலெய்மனி, ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி, துணை இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.