கொல்கத்தா பெண் வைத்தியர் கொலைச் சம்பவம் – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொல்கத்தாவில் பெண் வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், சஞ்சய் ராய்க்கு நீதிமன்றம் 50,000 இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள அரசாங்க வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையிலிருந்த பெண் வைத்தியர் கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
பெண் வைத்தியரின் கண்கள், உதடு, கழுத்து, வயிறு, தோள்பட்டை, விரல்கள், பிறப்பு உறுப்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த கொலை தொடர்பாக, காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை முதலில் மேற்குவங்க காவல்துறை விசாரித்தது.
காவல்துறையினரின் விசாரணை குறித்து வைத்தியப் பீட மாணவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து மேற்குவங்க உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் 81 சாட்சிகள் அடையாளங்காணப்பட்டனர்.
அவர்களில் 50 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி சிபிஐ தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பெண் வைத்தியர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் சிபிஐ குற்றப்பத்திரிகையில் , சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 9ஆம் திகதி அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்து திகதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி அனிபர் தாஸ் கடந்த 18ஆம் திகதி தீர்ப்பினை வழங்கினார்.
அப்போது, சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டனை விபரம் இன்று (20) அறிவிக்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி இன்று ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.