கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சிஐஏ உளவாளி?
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சிஐஏ உளவாளியாக இருந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரர் கிம் ஜாங் நாம் 2017 ம் ஆண்டு மலேசியாவில் கொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் ரகசிய உளவாளியாக இருந்திருக்கலாம் என அமெரிக்க பத்திரிக்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விஷயத்தை நன்று அறிந்த ஒருவர் கூறியதாக இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிஐஏவுக்கும் கிம் ஜாங் நாமுக்கும் இடையேயான உறவுகள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிகாரிகள் சிலர், அவர் உள்நாட்டு ரகசியங்களை தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பில்லை எனவும் மற்ற நாடுகளில் பாதுகாப்பு சேவைகள் அமைப்புடன் குறிப்பாக சீனாவுடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்ததாக நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் நிருபர் அன்னா பிபீல்டு வெளியிட்டுள்ள ‘மிகப்பெரிய வெற்றியாளர்’ என்ற புத்தகத்தில் கிம் ஜாங் நாம் சிஐஏ-வின் ரகசிய உளவாளி என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தனது கையாள்களை சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் எனவும் பிபில்டு கூறுகிறார்.
மலேசியாவில், ஒரு நட்சத்திர ஹோட்டலில் உள்ள லிப்டில் ஆசியாவை சேர்ந்த அமெரிக்க உளவாளியுடன் அவர் கடைசியாக இருந்ததாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி தெரிவிக்கிறது. மேலும் அவரது பையில் இருந்த 120,000 டாலர்கள் அவரது உளவாளி பணிக்கான சன்மானமாகவோ அல்லது சூதாட்ட தொழில் மூலம் அவர் சம்பாதித்த பணமாகவும் இருக்கலாம் என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியா அரசுதான் அவரை கொலை செய்ய உத்தரவு பிறப்பித்தது என தென்கொரியாவும் , அமெரிக்காவும் கூறியுள்ளது. ஆனால் இதை வட கொரிய அரசு மறுத்துள்ளது.
கிம் ஜாங் நாம் 2017 பிப்ரவரியில் மலேசியா சென்றது சிஐஏ தொடர்பாளரை சந்திக்கவும் மற்றும் வேறு சில காரணங்களுக்காகவும் சென்றிருக்கலாம் என நாளேடு குறிப்பிடுகிறது.
அவரது முகத்தில் விஷம் தூவி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இரு பெண்களையும், மலேசிய அரசு விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது