கொலம்பியாவில் பொலிஸ் மிருக தனத்திற்கெதிரான போராட்டத்தில் ஏழு பேர் உயிரிழப்பு!
கொலம்பியாவில் பொலிஸ் மிருகதனத்திற்கெதிரான போராட்டத்தில், குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டால் தான், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
ஆனால், ஏழு பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக கொலம்பியாவின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் பகோட்டாவின் எங்கடிவா என்ற பகுதியில் கடந்த 9ஆம் திகதி இரவு நண்பர்களுடன் சென்றுகொண்டிருந்த 46 வயதான ஜவியர் ஹம்பர்ட்டோ ஓர்டோனெஸ் என்பவரை பொலிஸார் தடுத்தி நிறுத்தினர்.
இதன்போது, வழக்கறிஞரும் இருவரின் தந்தையுமான ஜவியர் ஹம்பர்ட்டோ ஓர்டோனெஸ் என்பவரை பொலிஸார் கைதுசெய்ய முயற்சித்தனர். ஜவியர் கொரோனா வைரஸ் சமூக தொலைதூர விதிகளை மீறியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் கீழே தள்ளப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதனை அவருடன் இருந்த நண்பர்கள் கைதொலைப்பேசியில் காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த காணொளியில், “நான் மூச்சுத் திணறல் அடைகிறேன். தயதுசெய்து விடுங்கள்’ என்று ஜவியர் கூச்சலிடுவதைக் கேட்கலாம். ஏனெனில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவரை முதுகில் முழங்கால்களால் தடுத்து நிறுத்தி, அவரை மீண்டும் மீண்டும் கீழே அழுத்தினர்.
இதனையடுத்து பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட ஜவியர், பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டதாகவும் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடிக்க, இதற்கு நீதி கோரியும், பொலிஸாரின் மிருகத்தனத்தை கண்டித்தும் கொலம்பியாவில் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மெடலின், பெரீடா மற்றும் இபேக் நகரங்களிலும் போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
நகரத்தின் மேற்கில் உள்ள எங்காட்டிவா சுற்றுப்புறத்தில் பொறுப்பான அதிகாரிகள் உள்ள பொலிஸ் நிலையங்கள் சூறையாடப்பட்டன. பொது போக்குவரத்து உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டன.
பொகோட்டாவின் மேயர் கிளாடியா லோபஸ், பொலிஸ் மிருகத்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டித்துள்ளார்.
விசாரணையில் நிலுவையில் உள்ள இரண்டு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் ஜவியரை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்க கருப்பின மனிதரான ஜோர்ஜ் பிலாய்ட், பொலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.