கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு சீனா ஆதரவு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு, சீனா முழுமையான ஆதரவு வழங்கும் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு தீர்மானத்தின் மீது நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காணொளி முறையிலான விவாவதத்தில், இதற்கு சீன ஜனாதிபதி உறுதியளித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று முதன்முதலில் தாக்கியதில் இருந்து வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் சீனா செயற்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சுதந்திரமான விசாரணையை சீனா முழுமையாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில், கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வந்து நிலைமை சீரான பிறகு விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும். முதலில் மக்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என கூறினார்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின், வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
தற்போது வரை வைரஸ் தொற்றுக்கு, 48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை வுஹான் நகரில் உள்ள ஓர் ஆய்வகத்தில் உருவாக்கி உலக நாடுகளுக்கு சீனா பரவச் செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உருவானது எப்படி என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என உலகநாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கமையவே சீனா இதற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் முக்கிய அமைப்பான உலக சுகாதார அமைப்பின் 73ஆவது கூட்டம் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது. வழக்கமாக, மூன்று வாரங்கள் நடைபெறும் இந்தக் கூட்டம், இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, முதல் முறையாக காணொளி முறையில் இரண்டு நாட்கள் மட்டும் நடைபெறுகிறது.