கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தொழில் நுட்ப தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் சுவிஸ்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுடையவர்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான, புதிய தொடர்பு தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்த சுவிஸ்லாந்து திட்டமிட்டுள்ளது.
நோய் பரிமாற்ற வீதங்களைக் குறைக்கக்கூடும் என்று அதிகாரிகளால் நம்பப்படும் இந்த திட்டம், எதிர்வரும் 11ஆம் திகதி நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சாதனங்களுக்கு இடையில் புளூடூத் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி, அபாயத்தை மதிப்பிடும் குறித்த தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம், லொசேன் மற்றும் சூரிச் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கக்கூடிய புதிய தொடர்பு தடமறிதல் பயன்பாட்டை சோதிக்க லொசேன் அருகே உள்ள சாம்ப்லோன் இராணுவத் தளத்தைச் சேர்ந்த நூறு வீரர்கள் தானாகவே முன்வந்துள்ளனர்.
இவர்கள், பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து 24 மணிநேரமும் மக்களை கண்காணிக்கவுள்ளனர். அதே நேரத்தில் பயனர்களின் தனியுரிமையையும் பாதுகாக்கின்றனர்.
டிஜிட்டல் தொற்றுநோயியல் ஆய்வகத்தில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஒஃப் டெக்னாலஜி லொசேன் (ஈபிஎஃப்எல்) இயக்குனர் மார்செல் சலாத்தே இதுகுறித்து கூறுகையில்,
‘ஒருவருக்கு சோதிக்கப்பட்டு நேர்மறையான அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் தங்கள் அடையாளத்தை கணினியில் பதிவேற்றலாம். பின்னர் மற்ற எல்லா பயன்பாடுகளும் அவர்கள் அந்த நபருடன் நெருக்கமாக இருந்தார்களா என்பதைச் சரிபார்க்கலாம். பின்னர் சுகாதார அதிகாரிகளை அழைக்கலாம்’ என கூறினார்.
ஏற்கனவே இந்த முறைமை ஜேர்மனி, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.