கொரோனா வைரஸ் நெருக்கடி: போர்த்துக்கலின் பொருளாதாரம் முதல் காலாண்டில் வீழ்ச்சி!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நெருக்கடி காரணமாக, போர்த்துக்கலின் பொருளாதாரம் முந்தைய மூன்று மாத காலப்பகுதியிலிருந்து முதல் காலாண்டில் 3.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய புள்ளிவிபர நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 2.4 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 0.7 சதவீத வளர்ச்சியையும், ஆண்டுக்கு 2.2 சதவீத வளர்ச்சியையும் எட்டிய போர்த்துக்கலுக்கு இந்த புள்ளிவிபரங்கள் ஒரு அடியாக பார்க்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன்பே, சில நடவடிக்கைகள் மற்றும் தேவைகளின் இயல்பான செயற்பாட்டில் இடையூறுகள் இருந்ததாகவும், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தாகவும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான ஸ்பெயினுடன் ஒப்பிடும்போது போர்த்துக்கலுக்கு குறைவான பாதிப்பே என்ற போதிலும், ஏற்றுமதி சார்ந்த, சுற்றுலா சார்ந்த பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி முடக்கநிலை அறிவிக்கப்பட்டிதிலிருந்து இதுவரை 28,319பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,184பேர் உயிரிழந்துள்ளனர்.