கொரோனா வைரஸ் தொற்று குறித்து ரணில் வௌியிட்டுள்ள அறிக்கை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் இதற்கு முகங்கொடுப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தற்போதைய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளும் இந்த வைரஸுக்கு முகங்கொடுக்க தமது சுகாதார வசதி போதுமானதாக இல்லை என அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு முகங்கொடுக்க இலங்கையின் அரச மற்றும் தனியார் சுகாதார பிரிவுகளுடன் கலந்துரையாடி அரசாங்கம் ஒரு முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியமை சிறந்த நடவடிக்கை என குறிப்பிட்ட அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு உடனடியாக வௌிப்படுத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.