Main Menu

கொரோனா வைரஸ்: தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு பதிவானது!

உலகையே உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தினால், தென்கொரியாவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக தென்கொரியாவில், இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் தென்கொரியாவில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதன் மூலம், இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 156ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, தென்கொரியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தென் கொரியாவில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படும் டேகு மற்றும் சியோங்டோ ஆகிய இரண்டு நகரங்களிலும் சிறப்பு பராமரிப்பு மண்டலங்கள் உண்டாக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தென்கொரிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,465ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,109 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.